மண்டல இணை பதிவாளரை கண்டித்து 700 ரேஷன் கடைகளை அடைத்து பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்


மண்டல இணை பதிவாளரை கண்டித்து 700 ரேஷன் கடைகளை அடைத்து பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 11 July 2023 12:15 AM IST (Updated: 11 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மண்டல இணை பதிவாளரை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் 700 ரேஷன் கடைகளை அடைத்து பணியாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

பட்டியல் இன பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க மறுக்கும் நாகை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளரை கண்டிப்பது, பதவி உயர்வு கேட்கும் பெண் பணியாளர்களுக்கு விற்பனை தொகை செலுத்திய பின்பும் செலுத்தவில்லை என பதவி உயர்வு மறுக்கும் அதிகாரியை கண்டிப்பது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஜூலை 10-ந் தேதி மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ரேஷன் கடைகளை அடைத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

அந்த வகையில் கடலூரில் மாநில துணை தலைவர் துரை சேகர் தலைமையில் அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட தலைவர் தங்கராசு, மாவட்ட செயலாளர் செல்வராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாமணி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

700 கடைகள் அடைப்பு

இதுகுறித்து நியாய விலைக்கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கூறுகையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் மண்டல இணை பதிவாளராக பணிபுரிபவர் பணியாளர் விரோத போக்கை கடைபிடித்து வருகிறார். குறிப்பாக பட்டியல் இன பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல், பதவி உயர்வு கேட்பவர்களுக்கு ஏன் நிரந்தர பணி நீக்கம் செய்யக்கூடாது என நோட்டீஸ் வழங்கியுள்ளார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று (அதாவது நேற்று) ஒரு நாள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நியாய விலைக்கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் சுமார் 700 ரேஷன் கடைகளை அடைத்து பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.


Next Story