7,000 மாணவ, மாணவிகள் பங்கேற்கும் குடியரசு தின தடகள போட்டிகள் 25-ந் தேதி தொடங்குகிறது
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் 7 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் வருகிற 25-ந் தேதி தொடங்கி 6 நாட்கள் நடக்கிறது.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் 7 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் வருகிற 25-ந் தேதி தொடங்கி 6 நாட்கள் நடக்கிறது.
குடியரசு தின தடகளப் போட்டிகள்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாநில அளவிலான குடியரசு தின தடகள போட்டிகள் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி னார். அப்போது அவர் பேசியதாவது:- திருவண்ணாமலை மாவட்டத்தில் மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை) முதல் 30-ந் தேதி வரை 6 நாட்கள் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது.
இதில் மாநிலம் முழுவதுமிருந்து 3 ஆயிரத்து 557 மாணவர்களும், 3 ஆயிரத்து 557 மாணவிகளும் பங்கேற்கின்றனர். அவர்களுடன் 234 பொறுப்பாசிரியர்கள் மற்றும் 250 நடுவர்கள் வர உள்ளனர்.
எனவே மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு முழுமையான பாதுகாப்பு பணிகளில் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்ள உள்ளதால் போட்டி தொடக்க நாளன்று மாணவர் அணிவகுப்பு நிகழ்வின்போது போலீசாரின் இசைவாத்தியக் குழுவினருடன் அணிவகுப்பு நடைபெறும்.
தடுப்புகள் அமைப்பு
விளையாட்டு அரங்கத்தின் பின்பகுதியில் யாரும் நுழையாதவாறு தடுப்புகளை அமைத்து சமுக விரோத செயல்பாடுகள் நடைபெறாத வகையில் முழுமையான பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மூலம் மாணவர்கள் தங்குமிடம், உணவு சமைக்கும் இடம், விளையாட்டு திடல் ஆகிய இடங்களில் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும். நகராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் வசதி, கழிவறை வசதி ஆகியவை போட்கள் தொடங்கும் முதல் நாளிலேயே விளையாட்டு அரங்கத்தை சுற்றியும், உள்ளேயும் தூய்மை பணியாளர்களை கொண்டு தூய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
சுகாதாரத்துறை மூலம் தேவையான மருத்துவ வசதி, அவசர மருத்துவ ஊர்தி, செவிலியர்களை பணியில் ஈடுபடுத்துதல், தினந்தோறும் போட்டியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் பணிக்காக டாக்டர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பள்ளிக்கல்வித்துறையின் மூலம் தலைமையாசிரிகள், உடற்கல்வி ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலரை குழுத்தலைவராக கொண்டு மேற்பார்வை பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர்பிரதாப்சிங், உதவி கலெக்டர் (பயிற்சி) ரஷ்மி ராணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (தலைமையிடம்) ஸ்டீபன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல், திருவண்ணாமலை உணவு பாதுகாப்பு அலுவலர் ராமகிருஷ்ணன், துறை அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.