திருப்பூரில் இருந்து 705 சிறப்பு பஸ்கள்


திருப்பூரில் இருந்து 705 சிறப்பு பஸ்கள்
x
திருப்பூர்


பொங்கல் பண்டிகைக்கு பயணிகள் வெளியூர் செல்வற்காக திருப்பூரில் இருந்து 705 சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டன.

பொங்கல் பண்டிகை

திருப்பூரில் உள்ள பனியன் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் வெளிமாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்கு பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்தை நம்பி உள்ளனர். பனியன் நிறுவனங்களுக்கு நேற்று முதல் பொங்கல் பண்டிகை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து திருப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு தொழிலாளர்கள் நேற்று இரவு முதல் புறப்பட்டு சென்றார்கள்.

தென்மாவட்ட மக்கள் அதிகம் உள்ளனர். இவர்களுக்கு 2 ரெயில்கள் மட்டுமே திருப்பூரில் இருந்து உள்ளது. இதன்காரணமாக மக்கள் பஸ்சில் பயணம் செய்கிறார்கள். தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. அங்கிருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்செந்தூர், தூத்துக்குடி, கம்பம் போன்ற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.

705 சிறப்பு பஸ்கள்

புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, கரூர் மார்க்கமாக செல்லும் பஸ்களும், மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சேலம், சென்னை செல்லும் பஸ்களும் இயக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பஸ்கள் நேற்று முதல் இயக்கப்பட்டன.

மதுரைக்கு 203 பஸ்களும், தேனிக்கு 103 பஸ்களும், திண்டுக்கல்லுக்கு 65 பஸ்களும், திருச்சிக்கு 170 பஸ்களும், கரூருக்கு 41 பஸ்களும், சேலத்துக்கு 112 பஸ்களும், சென்னைக்கு 11 பஸ்களும் என மொத்தம் 705 சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் திட்டமிட்டு இயக்கி வருகிறார்கள். நேற்று இரவு முதல் வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த சிறப்பு பஸ்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை இயக்கப்பட உள்ளது.

கடைவீதிகளில் கூட்டம்

பயணிகளின் வருகைக்கு ஏற்ப பஸ்களை இயக்குவதற்காக பஸ் நிலையங்களில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தயார் நிலையில் ஏற்பாடுகளை செய்துள்ளனர். அதுபோல் கூட்ட நெரிசல் இல்லாமல் பஸ் நிலையங்களில் பயணிகள், பஸ்சில் ஏறி செல்வதற்காக கட்டையால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஜேப்படி ஆசாமிகள் கைவரிசையை தவிர்க்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதுபோல் சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜேப்படி, வழிப்பறி, திருட்டு ஆசாமிகள் குறித்து போலீசார் பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி மூலமாக எச்சரித்து வருகிறார்கள். பிரதான சாலைகளில் போலீசார் நியமிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தினார்கள். நேற்று மாலை முதல் கடைவீதிகளில் கூட்டம் அதிகரித்து. இன்று (சனிக்கிழமை) கடைவீதிகளில் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story