ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டில் 710 காளைகள் சீறிப்பாய்ந்தன


ஆலங்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 710 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில், மாடுகள் முட்டி 10 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வம்பனில் வீரமாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவையொட்டி மாஞ்சான்விடுதி மற்றும் கொத்தகோட்டை ஊராட்சி மக்களால் நேற்று காலை 8.15 மணியளவில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முதலில் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் 250 மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. பின்னர் மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி திருச்சி, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 710 காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

10 பேர் காயம்

இந்த ஜல்லிக்கட்டு 5 சுற்றுகளாக நடைபெற்றது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை கண்டு சில மாடுபிடி வீரர்கள் சிதறி ஓடினர். திமிறிய காளைகளை சில காளையர்கள் திமிலை பிடித்து அடக்கினர். சில ஜல்லிக்கட்டு காளைகள் களத்தில் நின்று வீரர்களை பந்தாடியது. அப்போது பார்வையாளர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்து வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 10 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 4 பேரும், ஆலங்குடி அரசு மருத்துவமனையில் ஒருவரும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பரிசுகள்

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளுக்கும் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், சைக்கிள், கட்டில், பீரோ, மின்விசிறி, குக்கர், கிரைண்டர், சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை ஏராளமானோர் கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர். ஆலங்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story