73-வது பிறந்தநாள்: ரஜினிகாந்த் வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்கள்


73-வது பிறந்தநாள்: ரஜினிகாந்த் வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்கள்
x

நடிகர் ரஜினிகாந்தின் 73-வது பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள அவரது வீட்டின் முன்பு வாழ்த்து சொல்வதற்காக ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்தனர். மேலும் ‘கேக்’ வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.

சென்னை,

தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் ரஜினிகாந்த், தென்னிந்திய சினிமாவின் 'சூப்பர் ஸ்டார்' ஆக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக கோலோச்சி வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொத்தம் 160-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் அவர் நடித்து வருகிறார். இது அவரது 169-வது படமாகும்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது 73-வது வயதில் நேற்று அடியெடுத்து வைத்தார். இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டின் முன்பு நள்ளிரவு முதலே ரசிகர்கள் வர தொடங்கினர். நேற்று காலை 8 மணிக்கு மேல் ரசிகர்கள் அதிக அளவில் குவிய தொடங்கினர். எனவே அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்கள்

ரஜினிகாந்த் வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்கள் 'கேக்' வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் அவரது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து வீட்டின் முன்பு 'தலைவா... தலைவா...' என்று கோஷமிட்டபடியே காத்திருந்தனர். ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் தனது வீட்டில் ரசிகர்களை சந்திப்பது ரஜினிகாந்தின் வழக்கம். இதனால் பிறந்தநாளில் ரஜினிகாந்தை பார்த்துவிடும் ஆவலில் ரசிகர்கள் காத்திருந்தனர்.

அப்போது 'ரஜினிகாந்த் ஊரில் இல்லை' என்று அங்கிருந்த பாதுகாவலர்கள் தெரிவித்தனர். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சில இளம்பெண்கள் சோகத்தில் அழ தொடங்கினார்கள். அப்போது மழை பெய்ய தொடங்கியது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான ரசிகர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பியபடியே காத்திருந்தனர்.

லதா வேண்டுகோள்

அப்போது ரஜினிகாந்தின் மனைவி லதா வீட்டை விட்டு வெளியே வந்தார். அங்கு திரண்டிருந்த ரசிகர்களிடம், 'ரஜினி சார் வெளியூரில் இருக்கிறார். அவரது சார்பில் உங்களது அன்பான வாழ்த்துகளை நான் ஏற்றுக்கொள்கிறேன். மிக்க நன்றி. தயவுசெய்து காத்திருக்க வேண்டாம்' என்று கூறினார். இதையடுத்து ரசிகர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

இதுகுறித்து ரசிகர்கள் சிலர் கூறுகையில், 'பிறந்தநாளின்போது ரஜினிகாந்தை பார்க்க முடியாமல் போவது வருத்தம்தான். ஆனாலும் அவர் எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார வேண்டுகிறோம். அதுவே எங்களுக்கு போதும்'' என்றனர்.

ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அன்னதானம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஏழை-எளியோருக்கு வழங்கினார்கள். அவரை வாழ்த்தியும், அவர் நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர்' படம் வெற்றிபெறவும் நகரின் பல இடங்களில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தன.

எல்.முருகன், டாக்டர் ராமதாஸ் வாழ்த்து

மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'தலைசிறந்த நடிப்பால் மக்கள் மனதில் நிலைத்து வாழும் சூப்பர் ஸ்டார் பத்மவிபூஷன் ரஜினிகாந்த் பிறந்தநாளில் எல்லாம் வல்ல இறைவன் ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்வை வழங்க பிரார்த்திக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், '73-வது பிறந்தநாள் காணும் புகழ்பெற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல உடல் நலத்துடன் நூறாண்டுகள் வாழவேண்டும் என வாழ்த்துகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்பட பலரும் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Next Story