மினி லாரியில் கடத்திய 7,440 போலி மதுபாட்டில்கள் பறிமுதல்


மினி லாரியில் கடத்திய 7,440 போலி மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே மினி லாரியில் கடத்திய 7,440 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் வாகனத்தை மரத்தில் மோதிவிட்டு தப்பி ஓடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

விழுப்புரம்

விழுப்புரம்

நிற்காமல் சென்ற மினி லாரி

விழுப்புரம் அருகே கெங்கராம்பாளையம் மதுவிலக்கு சோதனைச்சாவடியில் நேற்று காலை போலீஸ்காரர்கள் பாண்டியன், சிவப்பிரகாசம் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரி மாநிலத்தில் இருந்து ஒரு மினி லாரி வேகமாக வந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த மினி லாரியை நிறுத்துமாறு சைகை காண்பித்தனர். போலீசாரை கண்டதும் மினி லாரியை நிறுத்தாமல் அதன் டிரைவர், அங்குள்ள சோதனைச்சாவடியை கடந்து வேகமாக ஓட்டிச்சென்றார்.

மரத்தில் மோதல்

உடனே போலீசார், இருசக்கர வாகனத்தில் அந்த மினி லாரியை துரத்தினர். குடுமியாங்குப்பம் என்ற இடத்தில் சென்றபோது அந்த மினி லாரியை அதன் டிரைவர், அங்குள்ள சாலையோர பள்ளத்தில் இறக்கி அருகில் இருந்த மரத்தில் மோத செய்தார். அந்த லாரி நின்றதும், அதிலிருந்து கீழே இறங்கி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் அந்த மினி லாரியை போலீசார் சோதனை செய்ததில் மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே இதுகுறித்து சோதனைச்சாவடி போலீசார், விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விழுப்புரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

7,440 போலி மதுபாட்டில்கள் பறிமுதல்

அப்போது அந்த மினி லாரியில் 155 அட்டைப்பெட்டிகளில் 7,440 போலி மதுபாட்டில்கள் இருந்தது. விசாரணையில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபானங்களை வாங்கி வந்து, அதனை போலி மதுபாட்டில்களாக தயாரித்து வெளிமாநிலத்திற்கு கடத்திச்செல்ல இருந்தது தெரியவந்தது. இதனை கடத்த முயன்றவர் யார்?, இந்த போலி மதுபானங்கள் எங்கிருந்து எங்கு கடத்தப்படுகிறது? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய மினி லாரி டிரைவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story