பிளஸ்-2 பொதுத்தேர்வை 7,440 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்


பிளஸ்-2 பொதுத்தேர்வை 7,440 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 7,440 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 7,440 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை(திங்கட்கிழமை) தொடங்குகிறது. நீலகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 85 பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 504 மாணவர்கள், 3 ஆயிரத்து 936 மாணவிகள் என மொத்தம் 7 ஆயிரத்து 440 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதற்காக தேர்வு அறை அனுமதி சீட்டுகள்(ஹால் டிக்கெட்) ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளன.

அவர்கள் தேர்வு எழுத வசதியாக 41 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. தனித்தேர்வர்களுக்கு, ஊட்டி சி.எஸ்.ஐ. பள்ளி, கூடலூர் புனித தாமஸ் பள்ளி ஆகிய இடங்களில் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையங்களில் குடிநீர், கழிப்பிடம் உள்பட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

பதிவு எண்கள்

இதற்கிடையே நேற்று முதல் மாணவ-மாணவிகளின் பதிவு எண்களை, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மேஜைகளில் எழுதி ஒட்டும் பணி நடந்தது. ஊட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளில் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளின் பதிவு எண்களை, ஆசிரிய-ஆசிரியைகள் மேஜைகளில் ஓட்டினர். தேர்வை கண்காணிக்கும் பணியில் பறக்கும் படையினர், வினாத்தாள் கட்டுகாப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், துணை அலுவலர்கள், நிரந்தர பறக்கும் படையினர் என சுமார் 100 பேர் ஈடுபட உள்ளனர்.

ஏற்கனவே ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர், எருமாடு ஆகிய இடங்களில் உள்ள அரசு பள்ளிகளில் வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. மேலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

செல்போனுக்கு அனுமதி இல்லை

சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் பிளஸ்-2 பொதுத்தேர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனியசாமி கலந்து கொண்டார். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ெபாதுத்தேர்வு அன்று காலை 7 மணிக்கு வினாத்தாள்கள் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் தேர்வு அறை அனுமதி சீட்டில் சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டு உள்ளன. அதை மாணவ-மாணவிகள் சரியாக கடைபிடிக்க வேண்டும். மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் தேர்வு அறைகளுக்கு செல்போன் எடுத்து வர அனுமதி கிடையாது. ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story