நீலகிரியில் 7,474 வாகனங்கள் பதிவு


நீலகிரியில் 7,474 வாகனங்கள் பதிவு
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 7,474 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது என அதிகாரி தெரிவித்தார்.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 7,474 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது என அதிகாரி தெரிவித்தார்.

வாகன பதிவு

சமீபகாலமாக கார் மற்றும் மோட்டார் சைக்கிள் அத்தியாவசிய தேவையாகி விட்டது. இதனால் வீட்டுக்கு ஒரு வாகனம் என்று இருந்த நிலையில், தற்போது ஒரு நபருக்கு ஒரு வாகனம் என்ற நிலை உருவாகி உள்ளது. இதனால் ஆண்டுதோறும் வாகனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போதைய நிலவரப்படி மாநிலத்தில் மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 3½ கோடியை நெருங்கி வருகிறது. இதனால் சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது. நீலகிரியை பொருத்தவரையில் அதிகரித்து வரும் வாகன எண்ணிக்கை மற்றும் சுற்றுலா பயணிகள் தொடர் வருகை காரணமாக சாலையில் காலை, மாலை நேரங்களில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கடந்த ஆண்டு 7,474 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டு உள்ளன.

டிராக்டர்கள் அதிகரிப்பு

இதுகுறித்து நீலகிரி வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் கூறியதாவது:-

நீலகிரியை பொருத்தவரை சிறிய மாவட்டம் என்பதால் ஆண்டுதோறும் 10 ஆயிரத்திற்கும் குறைவான வாகனங்கள் தான் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த 2021-ம் ஆண்டு 6,747 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்தநிலையில் கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 7,474 ஆக அதிகரித்து உள்ளது. இதில் மோட்டார் சைக்கிள்கள் 3,369, கார்கள் 2,289 பதிவாகி உள்ளன. குறிப்பாக 2021-ம் ஆண்டு விவசாயிகள் வேளாண் பயன்பாட்டுக்கான 76 டிராக்டர்கள் பதிவு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 149 ஆக அதிகரித்து உள்ளது. இதன் மூலம் விவசாய பயன்பாட்டுக்கான தேவைகள் மற்றும் கருவிகள் பயன்பாடு அதிகரித்திருப்பதை காணலாம். மேலும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 30 சதவீதம் பேர் கோவை உள்ளிட்ட சமவெளி பிரதேசங்களில் இருப்பதால் பெரும்பாலான வாகனங்கள் அங்கும் பதிவு செய்யப்படுகிறது. கொரோனா பரவல் குறைந்து தற்போது பொருளாதாரம் உயர்ந்து வருவதால், இந்த ஆண்டில் வாகன பதிவு அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story