ஒரே ஆண்டில் 75 பேர் குண்டர் சட்டத்தில் கைது
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரே ஆண்டில் 75 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரே ஆண்டில் 75 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
குண்டர் சட்டம்
தமிழகத்தில் சட்டத்துக்கு புறம்பான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்து வருகிறது. அதாவது திருட்டுத்தனமாக மதுவிற்பனை, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுவது, வன்முறையை தூண்டுவது, கொலை, கொள்ளை, கடத்தல், வழிப்பறி, பாலியல் குற்றம் போன்ற குற்றச் செயல்களில் அடிக்கடி ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த சட்டம் பாய்ந்த நபர்கள் ஒரு ஆண்டு வரை ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
75 பேர் கைது
போலீஸ் சூப்பிரண்டு மூலம் கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்ட பிறகு சம்பந்தப்பட்ட நபர் மீது குண்டர் சட்டம் பாயும். குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நிபந்தனைகளுடன் விடுவிக்கப்படும் நபர் நிபந்தனைகளை மீறினால் அவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் வாய்ப்புள்ளது.
அந்த வகையில் கடந்த 2022-ம் ஆண்டில் 75 பேரை குமரி மாவட்ட போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.