75-வது ஆண்டு சுதந்திர தின அமுத பெருவிழா கொண்டாட்டம்
பெரம்பலூரில் நடந்த 75-வது ஆண்டு சுதந்திர தின அமுத பெருவிழாவில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விதமாக இந்த ஆண்டு சுதந்திர தின விழா அமுத பெருவிழாவாக நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி, வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி ஆகியோர் முன்னிலையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து கலெக்டர் திறந்த ஜீப்பில் நின்றபடி போலீசாரின் அணிவகுப்பினை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண்புறாக்களை கலெக்டரும், போலீஸ் சூப்பிரண்டும் பறக்கவிட்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் கலந்து கொண்டார்.
171 பேருக்கு பாராட்டு சான்றிதழ்
பின்னர் கலெக்டர், மெச்சத்தகுந்த அளவில் பணிபுரிந்தமைக்காக 38 போலீசாருக்கும், தீயணைப்பு துறையை சேர்ந்த 8 பேருக்கும், மேலும் அரசுத்துறையில் திறம்பட அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியதற்காக 125 அரசு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் என மொத்தம் 171 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். அதனை தொடர்ந்து அவர் 84 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 41 ஆயிரத்து 830 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் சுகாதார பணிகளை சிறப்பாக செயல்படுத்திய காரணத்திற்காக 2021-22-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் முன்மாதிரி கிராம விருது, புதுநடுவலூர் ஊராட்சிக்கு விருதுக்கான பரிசு தொகையாக ரூ.7 லட்சத்து 50 ஆயிரமும், பரிசு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.
இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லலிதா, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, பெரம்பலூர் நகர்மன்ற தலைவர் அம்பிகா மற்றும் அனைத்து துறைகளை சேர்ந்த அலுவலர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் பெரம்பலூரில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் சார்பில் சுதந்திர தின அமுத பெருவிழா கொண்டாடப்பட்டது. சுதந்திர தினவிழாவை முன்னிட்டு வெங்கடேசபுரத்தில் உள்ள சங்க கட்டிடத்தில் நேற்று தேசியக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.பெரம்பலூர் டவுன் பள்ளிவாசலில் பெரம்பலூர் மாவட்ட அரசு காஜி அப்துல் சலாம் தாவூதி தலைமையில் டவுன் பள்ளிவாசல் நாட்டாண்மை அல்லாபிச்சை தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.இதேபோல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.