வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மின்சார வாரியம் மூலம் 760 குழுக்கள் அமைப்பு


வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மின்சார வாரியம் மூலம் 760 குழுக்கள் அமைப்பு
x

வட கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மின்சார வாரியம் மூலம் 760 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில், சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது.

இதில் வாரியத்தலைவர் ராஜேஷ் லக்கானி முன்னிலை வகித்தார். அனைத்து இயக்குனர்கள் மற்றும் தலைமை என்ஜினீயர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி, நிருபர்களிடம் கூறியதாவது:-

பருவமழையையொட்டி 14 லட்சத்து 69 ஆயிரம் சிறப்பு பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு உள்ளது. அதில் 40 ஆயிரம் மின்சார கம்பங்கள் மாற்றப்பட்டு உள்ளன. 32 ஆயிரத்து 685 சாய்ந்த மின்சார கம்பங்கள் சரி செய்யப்பட்டு உள்ளன.

760 குழுக்கள்

மழையை எதிர் கொள்வதற்காகவும், சீரான மின்சாரம் வினியோகம் செய்வதற்காகவும் சென்னையில் 2 ஆயிரத்து 288 மின்சார பெட்டிகள் சரி செய்யப்பட்டு உள்ளன. 3 ஆயிரத்து 66 மின்சார பெட்டிகள் தரைமட்டத்தில் இருந்து 1 மீட்டர் உயரத்திற்கு உயர்த்தி பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டு உள்ளது.

மின்னகத்தில் 12 லட்சத்து 36 ஆயிரத்து 265 புகார்கள் பெறப்பட்டதில் 12 லட்சத்து 27 ஆயிரத்து 281 அதாவது 99 சதவீதம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. மீதம் உள்ள புகார்கள் சரி செய்யப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 44 மின்சார பகிர்மான வட்டங்களில் 760 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு குழுவிலும் 15 முதல் 20 பேர் வீதம் உள்ளனர். மழையை எதிர்கொள்ள இந்த குழு தயார் நிலையில் உள்ளது.

11 ஆயிரம் பணியாளர்கள்

சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்து 540 பேர் பகல் நேரத்திலும், இரவில் 2 ஆயிரத்து 400 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின் பேரில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழகம் முழுவதும் சீரான மின்சார வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வழக்கமான ஊழியர்களுடன் கூடுதலாக 11 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 24 மணி நேரம் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மின்சார வினியோகத்தில் பாதிக்கப்பட்டு இறப்பது ஒரு வகை, வீட்டுக்கு உள்ளேயே நடக்கும் மின்சார விபத்து என 2 வகை. இதனை பிரித்து பார்க்க வேண்டும். வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் இருக்க வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மின்சார தேவை குறைவு

சென்னையில் நடந்து வரும் புதைவழி மின்சார கம்பிகள் பதிக்கும் பணிகள் வருகிற டிசம்பர் மாதம் நிறைவு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தளவாட பொருட்கள் போதுமான அளவு இருப்பு உள்ளது.

மின்சாரத்தின் தேவை 13 ஆயிரத்து 746 மெகாவாட் நேற்று (நேற்று முன்தினம்), இன்று (நேற்று) 13 ஆயிரத்து 350 மெகாவாட்டாக குறைந்து உள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் போது சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

செல்போனை 'சுவிட்ச் ஆப்' செய்யக்கூடாது

மேலும் மழைக்காலங்களில் உயர் அலுவலர்கள் அனைவரும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தினருடனும், தீயணைப்பு துறையினருடனும் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும். அத்துடன், அனைத்து அலுவலர்களும் தமது செல்போனை எந்த காரணம் கொண்டும் 'சுவிட்ச் ஆப்' செய்து வைக்கக்கூடாது. பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வரும் பட்சத்தில் அதை உரிய முறையில் பரிசீலிக்க வேண்டும்.

இதனை மீறுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.


Next Story