நெல்லை சரகத்தில் 77 சதவீதம் வருமான வரி வசூல்-முதன்மை தலைமை கமிஷனர் ரவிச்சந்திரன் தகவல்


நெல்லை சரகத்தில் 77 சதவீதம் வருமான வரி வசூல்-முதன்மை தலைமை கமிஷனர் ரவிச்சந்திரன் தகவல்
x

நெல்லை சரகத்தில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 77 சதவீதம் வருமான வரி வசூல் செய்து சாதனை செய்து உள்ளனர், என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல வருமான வரித்துறை முதன்மை தலைமை கமிஷனர் ரவிச்சந்திரன் கூறினார்.

திருநெல்வேலி

நெல்லை சரகத்தில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 77 சதவீதம் வருமான வரி வசூல் செய்து சாதனை செய்து உள்ளனர், என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல வருமான வரித்துறை முதன்மை தலைமை கமிஷனர் ரவிச்சந்திரன் கூறினார்.

கலந்தாய்வு கூட்டம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல வருமான வரித்துறை முதன்மை தலைமை கமிஷனர் ஆர்.ரவிச்சந்திரன் நேற்று நெல்லைக்கு வந்தார். அவர் நெல்லை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மாலையில் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் வருமான வரித்துறை அதிகாரிகள், வருமான வரி செலுத்துவோர், தொழிலதிபர்கள் மற்றும் பட்டய கணக்காளர்கள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

முதன்மை தலைமை கமிஷனர்

கூட்டத்துக்கு முதன்மை தலைமை கமிஷனர் ஆர்.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மதுரை வருமான வரித்துறை தலைமை ஆணையர் சீமா ராஜ், மதுரை முதன்மை கமிஷனர் ஆஞ்சநேயலு, சென்னை வருமான வரித்துறை (நிர்வாகம் மற்றும் வரி செலுத்துவோர் சேவை) ஆணையர் பழனிவேல் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

பின்னர் முதன்மை தலைமை கமிஷனர் ஆர்.ரவிச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை சரகம் சாதனை

வருமான வரித்துறை சார்பில், வரி வசூலை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், வரி செலுத்துவோருக்கு சேவையை மேம்படுத்துவதற்காக இது போன்ற கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டலத்திற்கு ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி வருமான வரி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் 70 சதவீதம் வசூலிக்கப்பட்டு விட்டது. இது கடந்த நிதி ஆண்டைவிட 28 சதவீதம் கூடுதல் ஆகும்.

அகில இந்திய அளவில் ரூ.14 லட்சம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தமிழகத்துக்கு 17 சதவீதம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட நெல்லை சரகத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 77 சதவீதம் வரி வசூல் செய்து சாதனை செய்து உள்ளனர்.

தமிழகம் 4-வது இடம்

அகில இந்திய அளவில் வரி செலுத்துவதில் மும்பை முதலிடத்திலும், டெல்லி 2-வது இடத்திலும், கர்நாடகா 3-வது இடத்திலும், தமிழ்நாடு 4-வது இடத்திலும் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 10 சதவீதம் உயர்ந்து கொண்டே வருகிறது.

வரி ஏய்ப்பு நடக்காமல் தடுக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி

பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்கு பின் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பினாமி சட்டம் வந்த பிறகு ரூ.25 ஆயிரம் கோடி சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கருப்பு பணம் ரூ.7 ஆயிரம் கோடிக்கு மேல் முடக்கப்பட்டுள்ளது.

வருமான வரி வசூலை அதிகரிக்கவும், வரி தாக்கல் செய்யும் நடைமுறைகள் குறித்து விளக்கவும் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் நெல்லை சரக வருமான வரித்துறை கூடுதல் ஆணையாளர் ஆர்.வி.அருண் பிரசாத், வருமான வரி அலுவலர்கள் மீனாட்சி சுந்தரம், ராஜபாண்டி மற்றும் அலுவலர்கள், தொழிலதிபர்கள், பட்டய கணக்காளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் உதவி ஆணையாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.


Next Story