ஆசிரியை-ஓய்வு பெற்ற விமானப்படை ஊழியர் வீடுகளில் 77½ பவுன் நகைகள் கொள்ளை
தஞ்சை அருகே ஆசிரியை மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை ஊழியர் வீடுகளின் கதவை உடைத்து 77½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வல்லம்:
தஞ்சை அருகே ஆசிரியை மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை ஊழியர் வீடுகளின் கதவை உடைத்து 77½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
அரசு பள்ளி ஆசிரியை
தஞ்சை அருகே உள்ள ரெட்டிப்பாளையம் காமாட்சி அம்மன் நகரை சேர்ந்தவர் கஸ்தூரி. இவர் தஞ்சை அருகே தென்பெரம்பூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். ஆசிரியை கஸ்தூரிக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.
இதனைத்தொடர்ந்து இதய அறுவை சிகிச்சை செய்வதற்காக வீட்டை பூட்டி விட்டு கடந்த மாதம்(மார்ச்) 26-ந் தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கஸ்தூரி தனது மகள் இந்துபாரதியுடன் சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
58½ பவுன் நகைகள் கொள்ளை
இந்த நிலையில் நேற்று முன்தினம் கஸ்தூரியின் வீட்டுக்கு அவரது தாய் சுசிலா வந்தார். பின்னர் வீட்டின் முன்பக்க கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றுள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு மற்றும் வீட்டின் உள்ள இருந்த அறைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் உள்ள அறைக்கு சென்று பார்த்தபோது உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நெக்லஸ்கள், தோடுகள், வளையல்கள், ஆரங்கள், காசுமாலை, சங்கிலிகள் உள்பட 58½ பவுன் நகைகள் மற்றும் 5 ஜோடி வெள்ளி கொலுசுகள் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது.
போலீசார் விசாரணை
இது குறித்து தகவல் அறிந்ததும் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா, கள்ளப்பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தாமஸ் மற்றும் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொள்ளை சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.தஞ்சையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அந்த மோப்ப நாய் கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கொள்ளை நடந்த வீட்டில் இருந்த தடயங்களை தடய அறிவியல் நிபுணர்கள் சேகரித்தனர்.
வலைவீச்சு
இந்த கொள்ளை சம்பவம் குறித்து கஸ்தூரியின் மகள் இந்து பாரதி கொடுத்த புகாரின் பேரில் கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகைள கொள்ளையடித்துச்சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓய்வு பெற்ற விமானப்படை ஊழியர்
தஞ்சை மாதாக்கோட்டை அடைக்கல மாதா நகரை சேர்ந்தவர் ஸ்ரீதரன்(வயது 59). இவர், விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கடந்த 6-ந் தேதி இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் திருத்துறைப்பூண்டிக்கு உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார்.
19 பவுன்-ரூ.1¾ லட்சம் கொள்ளை
மறுநாள் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. வீட்டின் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 19 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 84 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. .
போலீசில் புகார்
இதுகுறித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசில் ஸ்ரீதரன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளையும் பதிவு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.