ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நெல்லை தாமிரபரணி ஆற்றில் 79 விநாயகர் சிலைகள் கரைப்பு
நெல்லையில் 79 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வந்து தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்பட்டது
நெல்லையில் 79 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வந்து தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 31-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்து முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவி வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் ஒருசில அமைப்புகள் சார்பிலும் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டன.
இந்த சிலைகளுக்கு தினமும் பூஜைகள் நடத்தி வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் டவுன், பாளையங்கோட்டை, சந்திப்பு, தச்சநல்லூர் மற்றும் புறநகர் பகுதியில் ஏராளமான விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகளை கரைப்பதற்கு மாவட்டத்தில் 12 இடங்களை ஒதுக்கீடு செய்து கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டிருந்தார்.
ஊர்வலம்-கரைப்பு
அதன்படி நேற்று மதியம் அந்தந்த பகுதி விநாயகர் சிலைகள் ஆட்டோ, லோடு ஆட்டோக்களில் ஏற்றப்பட்டது. பின்னர் அங்குள்ள தெருக்கள், வீதிகளில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக வலம் வந்தது. நெல்லை டவுன் பகுதியில் உள்ள 33 விநாயகர் சிலைகள் நெல்லையப்பர் கோவில் கீழ ரதவீதியில் அணிவகுத்து நின்றன.
பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் எஸ்.என்.ஹைரோடு, சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம், கொக்கிரகுளம் வழியாக வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் அருகே தாமிரபரணி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டது.
பாளையங்கோட்டை
இதே போல் பாளையங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நேற்று அந்தந்த பகுதி வழிபாட்டுக்கு பிறகு வாகனங்களில் ஏற்றி, திரிபுராந்தீசுவரர் கோவில் அருகே வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் தாமிரபரணி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு ஒவ்வொரு சிலையாக ஆற்றுக்குள் எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டது. இதையொட்டி அங்கு தீயணைப்பு வீரர்கள் ஆற்றுக்குள் தயார் நிலையில் நின்றிருந்தனர். பக்தர்களிடம் இருந்து சிலைகளை வாங்கி ஆழமான பகுதிக்கு கொண்டு சென்று கரைத்தனர்.
தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 1,500 கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு இருப்பதால் தண்ணீரில் வேகம் அதிகமாக உள்ளது. எனவே சிலை கரைக்கப்பட்ட பகுதிகளில் தீயணைப்பு வீரர்கள் படகிலும் தயார் நிலையில் இருந்தனர். சிலைகள் கரைப்பின் போது அசம்பாவித சம்பவம் நடைபெறாத வகையில் தீயணைப்பு வீரர்கள் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.
அன்னதானம்
சீவலப்பேரி ரோடு சாந்திநகரில் அமைக்கப்பட்டிருந்த மகாசக்தி விநாயகர் சிலைக்கு நேற்று மதியம் சிறப்பு பூஜை நடைபெற்றது. அங்கு விசுவஇந்து பரிஷத் மாநில துணைத்தலைவர் டாக்டர் பத்மாவதி, பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் மகாராஜன் ஆகியோர் தலைமையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் சிலை ஊர்வலமாக தாமிரபரணி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதை போல் நெல்லை மணிமூர்த்தீசுவரம், நாரணம்மாள்புரம், கோபாலசமுத்திரம் ஆகிய இடங்களில் நேற்று 79-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
அம்பை
அம்பை வெற்றி விநாயகர் கமிட்டி சார்பில் விநாயகர் விஜர்சனம் ஊர்வலம் கிருஷ்ணன் கோவில் முன்பிருந்து ஆரம்பித்து அம்பை சின்ன சங்கரன் கோவில் தாமிரபரணி ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது. இதில் விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட துணை தலைவர் சுடலைமுத்து குமார், ஒன்றிய செயலாளர் சசிகுமார், நகர செயலாளர் காளிராஜ், நகர தலைவர் ராமசாமி, ஒன்றிய தலைவர் தளவாய், ஒன்றிய இணை செயலாளர் மாரிமுத்து மற்றும் வனராஜ், செல்லப்பசாமி, அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி துைண சூப்பிரண்டு பிரான்சிஸ், இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.