முதற்கட்ட உடல்தகுதி தேர்வில் 798 பேர் தேர்வு


முதற்கட்ட உடல்தகுதி தேர்வில் 798 பேர் தேர்வு
x

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடந்த 2-ம் நிலை காவலர்களுக்கான முதற்கட்ட உடல்தகுதி தேர்வில் 798 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

வேலூர்

உடல்தகுதி தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 1,062 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு முதற்கட்டமாக உடல்தகுதி தேர்வு வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் கடந்த 6-ந் தேதி தொடங்கியது. முதல்நாளில் 294 பேரும், 2-வது நாளில் 308 பேரும் என்று 602 பேர் தேர்வாகினர்.

இந்த நிலையில் 3-வது நாளாக நேற்று வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் உடல்தகுதி தேர்வு நடைபெற்றது. இதில், மீதமுள்ள 262 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில், 217 பேர் கலந்து கொண்டனர். 45 பேர் பங்கேற்கவில்லை. வரிசையாக அமரவைக்கப்பட்டு, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.

798 பேர் தேர்வு

அதைத்தொடர்ந்து உயரம், மார்பளவு அளவீடு செய்யப்பட்டது. இதில், தகுதி பெற்றவர்களுக்கு 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. அதில், 7 நிமிடங்களில் ஓடி முடித்தவர்கள் தேர்வாகினர். உயரம், மார்பளவு, ஓட்டப்பந்தயத்தின் முடிவில் 217 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 21 பேர் உடல்தகுதி தேர்வில் தோல்வியடைந்தனர். இதனை வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையில் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், துணைபோலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையிட்டனர். உடல்தகுதி தேர்வு செய்யும் பணியில் 120 போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

2-ம் நிலை காவலர்களுக்கான முதற்கட்ட உடல்தகுதி தேர்வில் 1,062 பேரில் 798 பேர் தேர்வாகினர். இவர்களுக்கு 2-ம் கட்ட உடல் தகுதியான கயிறு ஏறுதல், நீளம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், கிரிக்கெட் பந்து எறிதல் உள்ளிட்ட தேர்வு இன்று (வியாழக்கிழமை) முதல் 11-ந் தேதி வரை நடைபெற உள்ளது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story