பனியன் நிறுவன தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை


பனியன் நிறுவன தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
x
திருப்பூர்

திருப்பூர், ஏப்.20-

திருப்பூரில் பெண்ணை சரமாரியாக குத்திக்கொலை செய்ய முயன்ற தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.

பனியன் நிறுவன தொழிலாளி

செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 49). இவர் திருப்பூர் வித்யாலயம் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அப்போது அதே பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த பல்லடத்தை சேர்ந்த புஷ்பராணி (44) என்பவருடன் பேசி வந்துள்ளார். புஷ்பராணிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து கணவர் இறந்து விட்டார். தனது மகன், மகளுடன் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் தன்னை திருமணம் செய்யுமாறு கூறி ராஜா, புஷ்பராணிக்கு தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு புஷ்பராணி மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த ராஜா, கடந்த 21-6-2018 அன்று மதியம் 12½ மணி அளவில் பல்லடம் ரோடு தமிழ்நாடு தியேட்டர் பின்புறம் உள்ள முள்காடு வழியாக நடந்து சென்ற புஷ்பராணியிடம் தகராறு செய்தார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.

7 ஆண்டு சிறை

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. கொலைமுயற்சி குற்றத்துக்காக ராஜாவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி செல்லத்துரை தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் அரசு வக்கீல் பஷீர் அகமது ஆஜராகி வாதாடினார்.


Next Story