8-ம் வகுப்பு மாணவன் தற்கொலை


8-ம் வகுப்பு மாணவன் தற்கொலை
x

வெள்ளியணை அருகே பெற்றோர் செல்போன் வாங்கி தர மறுத்ததால் 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை கொண்டான்.

கரூர்

8-ம் வகுப்பு மாணவன்

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள மணவாடி ஊராட்சி மருதம்பட்டி காலனியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 45). இவரது மனைவி செல்வி (30). இந்த தம்பதியின் மகன் நித்திஷ் (13). இவன் திண்டுக்கல் மாவட்டம் கூம்பூர் பகுதியில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி அதே பகுதி கொண்டமநாயக்கன்பட்டி அரசு நடுநிலை பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் குல தெய்வ கோவில் திருவிழாவிற்காக மருதம்பட்டி காலனியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்து நித்திஷ் தங்கியிருந்தான்.

இந்தநிலையில் தனது தாய், தந்தையிடம் தனக்கு புதிதாக செல்போன் வேண்டும் என்று கேட்டு நித்திஷ் வாக்குவாதம் செய்துள்ளார். அதற்கு தற்போது தங்களிடம் பணம் இல்லை என்றும், பின்னர் வாங்கி தருகிறோம் என்றும் பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால் சமாதானம் அடையாத நிதீஷ் மனவருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இந்நிலையில நேற்று முன் தினம் காலையில் பெற்றோர் உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு பொருட்கள் வாங்குவதற்காக கரூர் சென்று விட்டனர். வீட்டில் இருந்த நித்திஷின் அண்ணன் திவாகர் (15) அருகிலுள்ள காட்டிற்கு சென்று விட்டு பின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது நித்திஷ் வீட்டின் சமையலறை விட்டத்து கம்பியில் தூக்குமாட்டி தொங்கி கொண்டிருந்தான்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த திவாகர் அப்பகுதியில் இருந்தவர்களின் உதவியுடன் நிதிஷின் உடலை இறக்கி, பின் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளியணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யபிரியா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story