8 படகுகள் தீவைத்து எரிப்பு


8 படகுகள் தீவைத்து எரிப்பு
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் துறைமுகத்தில் 8 படகுகள் தீவைத்து எரிக்கப்பட்டது. மீன்பிடி வலைகளும் எரிந்து நாசமானது.

கடலூர்

கடலூர் முதுநகர்:-

கடலூர் துறைமுகத்தில் இருந்து சிங்காரத்தோப்பு, சோனங்குப்பம், அக்கரைகோரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தினந்தோறும் பைபர் படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள். பின்னர் அந்த படகுகளை கரையோரத்தில் வரிசையாக நிறுத்தி வைப்பது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் அக்கரைகோரி மீனவ கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் (வயது 28), குப்புசாமி (41), மேகநாதன் (51), பாலமுருகன் (31), பவலேஷ் (24) சாமிநாதன் (45) மகேந்திரன் (53) மற்றும் புதுச்சேரி மாநிலம் நரம்பை சேர்ந்த மலையாளத்தான் (வயது 40) ஆகியோர் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தனர். பின்னர் அவர்கள் தங்களது பைபர் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துவிட்டு வீட்டுக்கு சென்றனர்.

நள்ளிரவில் தீ

இந்த நிலையில் நள்ளிரவு 12.30 மணி அளவில் ஒரு பைபர் படகு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ அருகில் உள்ள மற்ற படகுகளுக்கும் பரவி ஒன்றன் பின் ஒன்றாக கொழுந்து விட்டு எரிந்தது. மேலும் படகுகளில் இருந்த மீன்பிடி வலைகளும் தீப்பற்றி எரிந்தது.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மீனவர்கள் விரைந்து வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் 8 பைபர் படகுகள் மற்றும் அதில் இருந்த மீன்பிடி வலைகள் தீயில் எரிந்து நாசமானது. இதன் மொத்த சேத மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இது குறித்த தகவலின் பேரில் கடலூர் துறைமுகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயில் எரிந்து சேதமான படகுகளை பார்வையிட்டனர். கடலூர் மீன்வளத்துறை அதிகாரிகளும் நேரில் சென்று படகுகளின் சேத விவரம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

மர்மநபர்கள் படகுகளை தீ வைத்து எரித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அந்த கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த 1-ந்தேதி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள தென்பெண்ணையாற்று கரையில் நிறுத்தி இருந்த 3 படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு கடலூர் துறைமுக கரையில் நிறுத்தி இருந்த 8 படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

நிவாரணம்

இதனிடையே கடலூர் மாவட்ட தி.மு.க. பொருளாளர் எம்.ஆர்.கே.பி.கதிரவன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் 6 படகு உரிமையாளர்களுக்கு தி.மு.க. சார்பில் தலா ரூ.25 ஆயிரம் நிவாரண உதவியை அவர் வழங்கினார். அப்போது கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, மாநகர செயலாளர் ராஜா, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, நிர்வாகி சுந்தரமூர்த்தி, கவுன்சிலர்கள் பிரசன்னா, ராஜா மோகன், இளையராஜா, கவிதா ரகுராமன், பாலச்சந்தர், விஜயலட்சுமி செந்தில் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story