8 குழந்தைகளுக்கு தலா ரூ. 10 லட்சம் உதவி
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த 8 குழந்தைகளுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் நிவாரணநிதிக்கான சேமிப்பு சான்றிதழை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் வழங்கினார்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த 8 குழந்தைகளுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் நிவாரணநிதிக்கான சேமிப்பு சான்றிதழை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் வழங்கினார்.
நிவாரண நிதி
பிரதமர் மோடி கொரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 10 லட்சத்துக்கான சேமிப்பு திட்ட சான்றிதழ்களை வழங்கும் நிகழ்ச்சி நாடு முழுவதும் காணொலி காட்சி மூலமாக நேற்று நடைபெற்றது.
அதன் அடிப்படையில் விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் மேகநாத ரெட்டி ஏற்பாடு செய்ததைத்தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த 8 குழந்தைகளுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி அஞ்சலக சேமிப்பு சான்றிதழை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் வழங்கினார்.
கல்விக்கடன்
மேலும் இந்த குழந்தைகளுக்கு இலவச பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்விக்கான கல்விக்கடன் பெறுவதில் உதவி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 23 வயது வரை ரூ. 5 லட்சம் அளவிற்கு மருத்துவ காப்பீடு, 18 வயதை எட்டியவுடன் தனிப்பட்ட தேவைகளுக்கு மாதாந்திர உதவி, 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு ஆண்டிற்கு ரூ. 10 ஆயிரம் கல்வி உதவி தொகை, திறன் வளர்ப்பு பயிற்சிக்கு கல்வி உதவித்தொகை, தொழில்நுட்பக் கல்வி உதவித்தொகை, ரூ. 50,000 கருணைத்தொகை உள்ளிட்ட உதவிகளை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.