அருணாசலேஸ்வரர் கோவிலில் 8 ஜோடிகளுக்கு திருமணம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று இலவச திருமண திட்டத்தின் கீழ் 8 ஜோடிகளுக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று இலவச திருமண திட்டத்தின் கீழ் 8 ஜோடிகளுக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
இலவச திருமண திட்டம்
2022-23-ம் ஆண்டின் சட்டமன்ற மானிய கோரிக்கை விவாதத்தின் போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 25 இலவச திருமணங்கள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 500 இலவச திருமணங்கள் கோவில்களில் திருமணங்கள் நடத்தப்படும் என்றும், இதற்கான செலவினத்தை கோவில்களே ஏற்கும் என மானிய கோரிக்கையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
கோவில் மூலம் இலவச திருமணம் நடத்துவதற்கு ஏற்கனே அரசாணையில் அனுமதிக்கப்பட்டு உள்ள திட்டச் செலவு ரூ.20 ஆயிரம் ஆகும்.
தற்போது இலவச திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்ட செலவினத் தொகை உபயதாரர்கள் மூலம் மேற்கொள்ளப்படுவதாலும், உபயதாரர் கிடைக்காத நிலையில் நிதி வசதி மிக்க கோவில் மூலமே திருமணம் நடத்தி வைக்கப்படுவதாலும் கோவிலில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்ட திட்ட செலவினத் தொகையை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி நிர்ணயம் செய்து ஆணையிடப்பட்டது.
8 ஜோடி மணமக்கள்
அதன்படி இத்திட்டத்தின் மூலம் திருவண்ணாமலை மண்டலத்திற்கு உட்பட்ட அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை மண்டல இணை ஆணையர் அலுவலகத்தினால் தேர்வு செய்யப்பட்ட ஏழை குடும்பத்தை சார்ந்த 8 ஜோடி மணமக்களுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி மணமக்களுக்கு திருமங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார். கோவிலில் நடைபெற்ற திருமணம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது. அத்துடன் மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களாக காமாட்சி விளக்கு, பீரோ, கட்டில், மெத்தை, பாய், தலையணை, மிக்சி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.
அதுமட்டுமின்றி இத்திட்டத்தின் மூலம் மணமக்களுக்கு திருமங்கல்யத்திற்கு 4 கிராம் தங்கம், மணமகன் - மணமகள் ஆடை, மணமக்கள் வீட்டார் 20 பேருக்கு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மண்டல இணை ஆணையர் லட்சுமணன், அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார், இணை ஆணையர் குமரேசன் மற்றும் உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி உள்பட கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், மணமக்களின் உறவினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.