குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவை விரிவாக்கம் செய்ய ரூ.8 கோடி நிதி-கலெக்டர் கார்மேகம் தகவல்
குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவை விரிவாக்கம் செய்ய ரூ.8 கோடி நிதி வழங்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.
நிலத்தடி நீர்
சேலம் மாவட்ட வனத்துறை சார்பில் 'உலக ஈரநில தின விழா' குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் நடைபெற்றது. இதற்கு மண்டல வன பாதுகாவலர் பெரியசாமி முன்னிலை வகித்தார்.
கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நெல் வயல்கள், நீர் நிலைகள், தொட்டிகள், கண்மாய்கள் மற்றும் குடிநீர் தேவைக்காக உருவாக்கப்பட்ட ஏரிகள், மீன் வளர்ப்பிற்காக உருவாக்கப்பட்ட குளங்கள், உப்பு உற்பத்திக்கான உப்பளங்கள், பொழுதுபோக்கு மற்றும் நீர்ப்பாசன நோக்கங்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளே ஈரநிலங்கள் ஆகும்.
இந்த ஈரநிலங்களை முறைப்படுத்தி பாதுகாப்பதால், நிலத்தடி நீரின் அளவு அதிகரிக்கும். ஈரநிலங்களை பாதுகாப்பதன் மூலம் சூழலியல் மற்றும் உயிரியல் பரிணாமம் பாதுகாக்கப்படும்.
ரூ.8 கோடி நிதி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவை விரிவாக்கம் செய்ய ரூ.8 கோடி நிதி வழங்கி உள்ளார். 131 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவின் பரப்பளவை மேலும் அதிகரிப்பதுடன், சூழலுக்கு ஏற்ற பல்வேறு வன உயிரினங்களைக் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வருங்காலத்திற்கு ஏற்ற சிறந்த சுற்றுச்சூழல் அமைந்திட வன பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது ஒவ்வருவரின் கடமையாகும். அதன்படி மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். மேலும் உலகம் மாசுபாடு இல்லாத சுற்றுச்சூழல் மிகுந்ததாக எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதை அறிந்து பொறுப்புடன் செயல்படவேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கார்மேகம் கூறினார்.
தொடர்ந்து ஈரப்பரப்பு மீட்டாக்கம் நேரம் என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். விழாவில் மாவட்ட வன அலுவலர் காஷ்யாப் ஷஷாங் ரவி, உதவி வன பாதுகாவலர்கள் கண்ணன், செல்வகுமார், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.