ரூ.8¼ கோடியில் கிராமச்சாலை விரிவாக்க பணி
வத்தலக்குண்டு அருகே ரூ.8¼ கோடியில் கிராமச்சாலை விரிவாக்க பணி முழு வீச்சாக நடந்து வருகிறது.
வத்தலக்குண்டு அருகே உள்ள சாந்திபுரம் பிரிவில் இருந்து ரெங்கப்ப நாயக்கன்பட்டி ஊராட்சி புள்ளிமான் கோம்பை பிரிவு வரை சுமார் 8 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை சீரமைக்கப்படாமல் பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருந்தது. இந்த சாலையை சீரமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்தனர்.
இதைக்கருத்தில் கொண்டு கிராமச்சாலை விரிவாக்க பணித்திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே 25 லட்சம் மதிப்பில் சாலை விரிவாக்க பணி கடந்த மாதம் தொடங்கி முழுவீச்சாக நடந்து வருகிறது.
குண்டும், குழியுமாக படுமோசமாக காட்சி அளித்த சாலை முதற்கட்டமாக சமப்படுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து ஓடைகள் உள்ள இடங்களில் பாலம் கட்டும் பணி தொடங்கியது. மேலும் பாலம் கட்டும் இடத்தில் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணி நிறைவடைந்தவுடன் தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.