ஈரோடு அருகே மர்ம விலங்கு கடித்து 8 ஆடுகள் பலி; பொதுமக்கள் பீதி
ஈரோடு அருகே மர்ம விலங்கு கடித்து 8 ஆடுகள் பலியானதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
ஈரோடு அருகே மர்ம விலங்கு கடித்து 8 ஆடுகள் பலியானதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
மர்ம விலங்கு
ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோடு அருகே உள்ள முருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் தனது தோட்டத்தில் 10 ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று இரவு ஆடுகளுக்கு வழக்கம் போல் உணவுகளை வைத்துவிட்டு தூங்க சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை ஆடுகளுக்கு உணவு வைக்க பிரபு வந்தார். அப்போது பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த 8 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து கொடூரமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஒரு ஆட்டின் உடல் பாகங்கள் அனைத்தையும் மர்ம விலங்கு கடித்து தின்றிருந்தது.
பொதுமக்கள் பீதி
முருகன் நகர் பகுதி காடுகள் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதியில் ஏராளமானோர் தங்களது தோட்டத்தில் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வில்லரசம்பட்டி அருகே உள்ள கருவில்பாறைவலசு பகுதியில் 19 கோழிகள், 4 ஆடுகளை அதே பகுதியில் சுற்றி தெரியும் தெரு நாய்கள் கடித்து கொன்றன. அதேபோல் இந்த ஆடுகளையும் தெருநாய்கள் கடித்து கொன்று இருக்கலாம் என முதலில் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் இறந்த ஆடுகளின் உடல் பாகங்கள் முழுவதும் கடித்து குதறப்பட்டு உள்ளதால் வேறு ஏதாவது மர்ம விலங்கு கடித்து கொன்று இருக்கலாம் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.