கனமழைக்கு 8 வீடுகள் இடிந்தன; பெண் காயம்
தாராபுரத்தில் தொடர் மழைக்கு 8 வீடுகள் இடிந்தன. இதில் பெண் ஒருவர் காயம் அடைந்தார். சேதமடைந்த வீடுகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
வீடுகள் இடிந்தன
தாராபுரத்தில் கடந்த 3 நாட்களாக இடைவிடாமல் தொடந்து மழை பெய்து வந்தது. இதனால்
தாராபுரம் காமராஜபுரம், வடதாரை, காமன்கோயில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, தேவேந்திரதெரு, புதுக்கோட்டை மேட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் சிவகுமார், ரவி, பழனியம்மாள், முனியப்பன், சங்கராகி உள்பட 8 பேர்களுடைய வீடுகள் இடிந்தன. இதில் வீட்டில் வைத்திருந்த பொருட்கள் சேதமடைந்தன. தேவேந்திர தெருவை சேர்ந்த காந்திமதி அய்யாவு வீடு இடிந்து விழுந்ததில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், நகராட்சி தலைவர் கு. பாப்பு கண்ணன், தி.மு.க.நகரச் செயலாளர் எஸ். முருகானந்தம், ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
கலந்து கொண்டவர்கள்
அப்போது பாதிக்கப்பட்டவர்களின் குறைகளை கேட்டறிந்தனர் வீடு இழந்து தவித்து வந்த சிலருக்கு அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு குடிநீர் படுக்கை வசதி ஆகியவற்றை செய்து கொடுத்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.அப்போது தாராபுரம் தாசில்தார் ஜெகஜோதி, வருவாய் ஆய்வாளர் க.அருணாசலம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.