நீலகிரியில் 8 வீடுகள் இடிந்தன
தொடர் மழையால் நீலகிரியில் 8 வீடுகள் இடிந்தன. அரசு பள்ளி தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது.
ஊட்டி,
தொடர் மழையால் நீலகிரியில் 8 வீடுகள் இடிந்தன. அரசு பள்ளி தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது.
8 வீடுகள் இடிந்தன
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. ஊட்டியில் நேற்று கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
நீலகிரியில் நேற்று மதியம் வரை குன்னூர் பகுதியில் 4 வீடுகள், பந்தலூர் மற்றும் கோத்தகிரியில் தலா ஒன்று, ஊட்டியில் 2 வீடுகள் என மொத்தம் 8 வீடுகள் ஒரு பகுதியில் இடிந்து விழுந்து சேதமடைந்து உள்ளன. தொடர் மழையால் குன்னூர் ஆர்செடின் சாலையில் கிளன்டேல் தேயிலை தொழிற்சாலை அருகே மரம் சாலையின் குறுக்கே விழுந்தது. தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றினர். ஊட்டி-கோத்தகிரி சாலை மைனலா பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தடுப்புச்சுவர்கள் விழுந்தது
கோத்தகிரியில் நேற்று பலத்த மழை பெய்தது. தொடர் மழை காரணமாக மிளிதேன் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. இதேபோல் காக்காசோலை கிராமத்தில் பார்வதி என்பவரது வீட்டிற்கு பின்புறம் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது. தொடர்ந்து பாதுகாப்பு கருதி அங்கு வசித்தவர்கள் பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். கோடநாடு அண்ணாநகரை சேர்ந்த சரோஜா என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதேபோல் பலத்த மழையின் காரணமாக ஜக்கனாரை ஆடுபெட்டு பகுதியில் உள்ள தடுப்புச்சுவர் மற்றும் காமராஜர் நகர் பகுதியில் வீட்டிற்கு அருகே இருந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
கலெக்டர் ஆய்வு
நீலகிரியில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்பு படையினர் 14 பேர் ஊட்டி தமிழகம் விருந்தினர் மாளிகையில் தயார் நிலையில் உள்ளனர். மேலும் பேரிடர் ஏற்பட்டால் நீலகிரி மாவட்ட பேரிடர் மேலாண்மை நிர்வாகத்தை 1077 அல்லது 0423-2442344 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.
ஊட்டி கோடப்பம்மந்து கால்வாயை கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கால்வாயில் இருந்து ரெயில் நிலையம் அருகே உள்ள சாலைக்கு கழிவுநீர் வராமல் இருக்க மணல் மூட்டைகளை அடுக்குமாறு நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் காந்திராஜன், ஆர்.டி.ஓ. துரைசாமி, தாசில்தார் ராஜசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மழையளவு
நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
ஊட்டி-96, நடுவட்டம்-46, கல்வட்டி-31, கிளன்மார்கன்-74, மசினகுடி-39, குந்தா-45, அவலாஞ்சி, எமரால்டு-48, குன்னூர்-57, பர்லியார்-53, உலிக்கல்-62 கோத்தகிரி-71, கோடநாடு-81, கூடலூர்-45 பதிவானது. சராசரியாக 45 மிமீ. மழை பதிவாகி உள்ளது.