வாலிபரிடம் ரூ.8¾ லட்சம் நூதன மோசடி


வாலிபரிடம் ரூ.8¾ லட்சம் நூதன மோசடி
x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதாக கூறி நூதன முறையில் வாலிபரிடம் ரூ.8¾ லட்சத்தை மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்


கோவையில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதாக கூறி நூதன முறையில் வாலிபரிடம் ரூ.8¾ லட்சத்தை மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் நிறுவன ஊழியர்

கோவை ஒண்டிப்பதூர் நியூ தயிர்இட்டேரி தெருவை சேர்ந்தவர் பிரசாத் (வயது 21). தனியார் நிறுவன ஊழியர். இவருடைய செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுந்தகவலுடன் ஒரு லிங்க் வந்தது. அதில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிகமாக கமிஷன் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்த பிரசாத் அந்த லிங்கை கிளிக் செய்தார்.

அப்போது அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் எதிர்முனையில் பேசிய நபர் ஆன்லைன் வர்த்தகத்தில் நீங்கள் முதலீடு செய்தால் அதிகலாபம் பெறலாம் என்று ஆசையை தூண்டும் வகையில் பேசினார். மேலும் தன்னிடம் பணத்தை கொடுத்தால் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதாக கூறியுள்ளார். இதை நம்பிய பிரசாத் அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் பல்வேறு தவணைகளாக ரூ.8 லட்சத்து 84 ஆயிரத்தை செலுத்தினார். ஆனால் அதன்பிறகு அந்த நபர் கூறிய கமிஷன் தொகையையும், முதலீட்டு தொகையையும் தரவில்லை என்று தெரிகிறது.

ரூ.8¾ லட்சம் மோசடி

இதனால் சந்தேகம் அடைந்த பிரசாத் அந்த செல்போன் எண்ணை தொடர்புகொண்டபோது அது சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்தது. தன்னிடம் ரூ.8 லட்சத்து 84 ஆயிரத்தை மோசடி செய்ததை அறிந்த அவர் இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிகம் லாபம் கிடைக்கும் என்று கூறி நூதன முறையில் மோசடி செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story