நன்னடத்தை அடிப்படையில் பாளையங்கோட்ைட சிறையில் இருந்து 8 ஆயுள் கைதிகள் விடுதலை-சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி பேட்டி
நன்னடத்தை அடிப்படையில் பாளையங்கோட்டை சிறையில் இருந்து 8 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளதாக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி கூறினார்
நன்னடத்தை அடிப்படையில் பாளையங்கோட்டை சிறையில் இருந்து 8 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளதாக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி கூறினார்.
சிறைத்துறை டி.ஐ.ஜி.
தமிழக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி நேற்று பாளையங்கோட்டை சிறைக்கு வந்து ஆய்வு செய்தார். அப்போது அவர் சிறை அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் மற்றும் கோப்புகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து சிறை கைதிகளிடம் அங்குள்ள வசதிகள், உணவின் தரம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டையில் சிறை கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்குக்கு சென்று அங்கு 5 கிலோ கியாஸ் சிலிண்டர் விற்பனையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் முகாமுக்கு வந்த பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கி, பிளாஸ்டிக், பாலித்தின் பயன்பாட்டை தவிர்க்குமாறு அறிவுரை வழங்கினார். முகாமில் இலவச உடல் பரிசோதனை, கண் பரிசோதனை ஆகியவை நடந்தது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரூ.5½ கோடி வருவாய்
தமிழகம் முழுவதும் சிறைத்துறை மூலமாக 5 பெட்ரோல் பங்க் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாளையங்கோட்டை சிறையின் சார்பில் நன்னடத்தை கைதிகளை கொண்டு இயக்கப்பட்டு வரும் பெட்ரோல் பங்கில் இதுவரை ரூ.146 கோடிக்கு பெட்ரோல், டீசல் விற்பனையாகி உள்ளது. இதன்மூலம் ரூ.5½ கோடி வருவாய் கிடைத்துள்ளது.
மதுரையில் புதிய சிறைச்சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். சிறைச்சாலைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களின் பயன்பாடுகள் தடுக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க தனி அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஆயுள் தண்டனை கைதிகளின் நன்னடத்தை செயல்பாடுகளின் அடிப்படையில், அரசு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு பலர் விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.
8 கைதிகள் விடுதலை
பாளையங்கோட்டை சிறையில் மொத்தம் 456 ஆயுள் தண்டனை கைதிகள் உள்ளனர். இதில் 63 பேர் நன்னடத்தை மூலம் விடுதலை செய்யப்படுவதற்கு தகுதியானவர்கள் ஆவர். இவர்களை பற்றிய விவரம் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அரசின் அனுமதிப்படி பாளையங்கோட்டை சிறையில் இருந்து 8 ஆயுள் தண்டனை கைதிகள் பொது மன்னிப்பு மூலம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து அரசு அறிவிக்கும் பட்சத்தில் மீதமுள்ளவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது ஜெயில் சூப்பிரண்டு சங்கர், உதவி ஜெயிலர் பெருமாள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.