திட்டக்குடியில்வெறிநாய் கடித்து 8 பேர் படுகாயம்
திட்டக்குடியில் வெறிநாய் கடித்து 8 பேர் படுகாயமடைந்தனா்.
திட்டக்குடி,
திட்டக்குடி நகராட்சியில் வெறிநாய் ஒன்று, சுற்றித்திரிந்து வந்தது. அந்த வெறிநாய், சாலையில் செல்பவர்களை விரட்டி, விரட்டி கடிக்க வந்தன. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று, வந்தனர். இந்த நிலையில் நேற்று கடைவீதி, புதுக்குடியான் சந்து, ஆற்றுப்பாதை தெருவில் நடந்து சென்றவா்களை அந்த வெறிநாய் கடித்தது.
இதில் அப்பகுதியை சேர்ந்த 8 பேர் காயமடைந்தனர். இதில் 5 பேர் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி அறிந்த திட்டக்குடி நகர மன்ற தலைவர் வெண்ணிலா கோதண்டம் மற்றும் நகராட்சி ஊழியர்கள், நகர மன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
அப்போது நகராட்சியில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் விரைவில் பிடித்து அகற்றப்படும் என்று தெரிவித்தனர். மேலும் 8 பேரை கடித்த வெறிநாயையும், நகராட்சி ஊழியர்கள் பிடித்து ஆளில்லா இடத்தில் கொண்டு சென்று விட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.