காவலாளி வீட்டில் 8 பவுன் நகை, ரூ.3 லட்சம்திருட்டு


காவலாளி வீட்டில் 8 பவுன் நகை,   ரூ.3 லட்சம்திருட்டு
x

நாகர்கோவில் அருகே காவலாளி வீட்டில் ஜன்னலை உடைத்து 8 பவுன் நகை, ரூ.3 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்:

நாகர்கோவில் அருகே காவலாளி வீட்டில் ஜன்னலை உடைத்து 8 பவுன் நகை, ரூ.3 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

காவலாளி

நாகர்கோவில் அருகே உள்ள குளத்தூரை சேர்ந்தவர் வள்ளிவேல் (வயது 52). இவர் கோட்டார் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள மாவட்ட குடும்ப நல செயலகத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு செல்வி (45) என்ற மனைவியும், சுருதிகா (20) என்ற மகளும், சர்மா (19) என்ற மகனும் உள்ளனர்.

மகன் மற்றும் மகளின் மேற்படிப்புக்காக ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் வங்கியில் இருந்து கடனாக வாங்கினார். அந்த பணத்தில் ரூ.3 லட்சம் வீட்டின் பீரோவில் இருந்தது. மேலும் மனைவி மற்றும் மகளுடைய 40 பவுன் தங்க நகைகளும் வீட்டில் இருந்தன.

இந்தநிலையில் நேற்று காலையில் வள்ளிவேல் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். மனைவி செல்வியும், மகளும் வீட்டை பூட்டிவிட்டு ராஜாக்கமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர்.

நகை-பணம் திருட்டு

பின்னர் வள்ளிவேல் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்த போது வீட்டின் பின்பக்க உள்ள ஜன்னல் உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்தது.

பீரோவில் இருந்த 8 பவுன் நகை, ரூ.3 லட்சம் திருடப்பட்டு இருந்தது. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட யாரோ மர்ம நபர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடி சென்றுள்ளனர்.

வீட்டில் இருந்த நகைகள் சிறிய, சிறிய பெட்டிகளில் அடைத்து பீரோவில் துணிக்கு இடையில் பல இடங்களில் வைத்துள்ளனர். இதனால் மறைவான இடங்களில் இருந்த 32 பவுன் நகைகள் திருடர்கள் கண்ணில் சிக்காமல் தப்பியது.

போலீசார் விசாரணை

மேலும் இதுகுறித்து வள்ளிவேல் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மற்றும் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷாஜெபகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்த துணிகர கொள்ளை குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

பட்டப்பகலில் பூட்டிய வீட்டில் 8 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story