பெயிண்டர் வீட்டில் 8 பவுன் நகைகள் திருட்டு
தஞ்சையில் பெயிண்டர் வீட்டில் 8 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை பார்வதிநகரை சேர்ந்தவர் அன்பழகன் (வயது53). பெயிண்டர். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு கருக்காடிப்பட்டி கிராமத்திற்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்ததுடன் அதில் இருந்த துணிமணிகள் சிதறி கிடந்தன.
பீரோவில் வைத்து இருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் இருக்கிறதா? என பார்த்தபோது அவற்றை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டைஉடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 8 பவுன் நகைகள், வெள்ளி பொருட்களை திருடிச் சென்றுவிட்டனர். இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் அன்பழகன் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.