திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு ரூ.56 கோடியில் 8 மாடி கட்டிடம்
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு ரூ.56 கோடியில் 8 மாடி கட்டிடம் கட்டப்பட இருப்பதாக நல்லதம்பி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 100 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. அதனை நல்லதம்பி எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு செய்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள், ஆக்சிஜன் தயார் நிலையில் உள்ளதா என மருத்துவ அலுவலர் கே.டி.சிவகுமாரிடம் கேட்டு அறிந்தார்.
பின்னர் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு தயாரிக்கப்படும் சமையல் கூடம், அவசர சிகிச்சை பிரிவு, மருந்துகள் வழங்கும் இடம், சித்தா பிரிவு, பல் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகளை கேட்டு வழங்கப்படும் உணவு நன்றாக உள்ளதா என கேட்டறிந்தார்.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 150 கூடுதல் படுக்கை வசதியுடன் ரூ.56 கோடியில் 8 மாடி கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த கட்டிடம் கட்டப்படும் இடங்களை நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள மாவட்ட காவல்துறைக்கு சொந்தமான இடத்தை அரசு மருத்துவமனைக்கு தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. அந்த இடத்தில் ரூ.56 கோடியில் 150 படுகைகள் கொண்ட புதிய அறுவை அரங்கம், நரம்பியல் பிரிவு, எலும்பு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட உள்ளது. புதிய கட்டிடத்திற்கான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைக்க உள்ளார் என்றார்.