எருதுவிடும் விழாவில் கிடைத்த பணத்தில் 8 கண்காணிப்பு கேமரா பொருத்தம்
எருதுவிடும் விழாவில் கிடைத்த பணத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் ப.முத்தம்பட்டி ஊராட்சியில் கடந்த வாரம் எருது விடும் திருவிழா நடைபெற்றது. விழாவில் எருதுகள் போட்டியில் பங்கேற்க பணம் வசூலிக்கப்பட்டது. இதில் வசூலான தொகையில் ப.முத்தம்பட்டி பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுவது என தீர்மானிக்கப்பட்டு ஊராட்சி எல்லை ஆரம்பம் மற்றும் எல்லை முடிவு, ஊர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.
கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி முருகன் கோவிலில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல் முறையாக ஊராட்சி முழுவதும் கண்காணிப்பு கேமரா பொதுமக்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை தொடர்பாக போலீசாருக்கு உதவியது கண்காணிப்பு கேமரா தான். இதேபோல அனைத்து ஊராட்சிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி குற்றம் மற்றும் விபத்தில் மாவட்டம் உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் பேசினார்கள்
நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.