தாய் யானையை கண்டுபிடிக்க 8 குழுவினர் தேடுதல் வேட்டை


தாய் யானையை கண்டுபிடிக்க 8 குழுவினர் தேடுதல் வேட்டை
x

மசினகுடி அருகே வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட குட்டி யானையை, தாய் யானையுடன் சேர்த்து வைப்பதற்காக 8 குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி

கூடலூர்,

மசினகுடி அருகே வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட குட்டி யானையை, தாய் யானையுடன் சேர்த்து வைப்பதற்காக 8 குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குட்டி யானை மீட்பு

மசினகுடி அருகே சீகூரஹல்லா ஆற்றில் கடந்த மாதம் 29-ந் தேதி ஆண் குட்டி யானை வெள்ளத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தது. இதுகுறித்து வனத்துறையினக்கு ஆதிவாசி மக்கள் தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், துணை இயக்குனர் அருண்குமார், வனச்சரகர்கள் ஜான் பீட்டர், முரளி உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து சென்று குட்டி யானையை மீட்டனர்.

இந்த சமயத்தில் தாய் காட்டு யானை அப்பகுதியில் இல்லை. இதனால் அதனுடன் குட்டியை சேர்த்து வைக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். தொடர்ந்து வனப்பகுதியில் குட்டியை அழைத்துச் சென்று தாய் யானையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால், இதுவரை தாயை கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று முன்தினம் மாலையில் 2 காட்டு யானைகள் நிற்பதை கண்ட வனத்துறையினர் குட்டியின் தாயாக இருக்கலாம் என எண்ணி சுமார் 70 மீட்டர் தூர இடைவெளியில் அழைத்து சென்றனர்.

8 குழுக்கள் அமைப்பு

அப்போது குட்டி யானை, சக யானைகளை நோக்கி ஓடியது. தொடர்ந்து வனத்துறையினரும் அங்கிருந்து வந்தனர். ஆனால் அந்தக் கூட்டத்தில் இருந்த யானைகள் குட்டியை விரட்டி விட்டது. இதைத்தொடர்ந்து நேற்று 3-வது நாளாக தாய் யானையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். தொடர்ந்து கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் குட்டி யானைக்கு திரவ உணவுகளை வழங்கி வருகின்றனர். இந்தநிலையில் தாய் காட்டு யானையை கண்டுபிடிப்பதற்காக 2 டிரோன் கேமரா மூலம் வனப்பகுதியில் தேடும் பணி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 8 குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் ஆதிவாசி மக்களிடமும் வன ஊழியர்கள் சென்று பெண் காட்டு யானை நடமாட்டம் அப்பகுதியில் உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.


Next Story