8 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
நாமக்கல் அருகே சரக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட 8 டன் ரேஷன்அரிசியை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
வாகன சோதனை
தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் காமினி, தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் பொது வினியோகத்திட்ட ரேஷன் அரிசி, மண்எண்ணெய், கலப்பட டீசல் கடத்துதல், பதுக்குவது சம்பந்தமாக கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி அறிவுரைப்படியும், ஈரோடு உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மேற்பார்வையிலும் நாமக்கல் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை நாமக்கல் அருகே உள்ள வாழவந்தி பகுதியில் மோகனூர்-வள்ளிபுரம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
8 டன் ரேஷன்அரிசி பறிமுதல்
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது அதில் 160 மூட்டைகளில் சுமார் 8 டன் ரேஷன்அரிசி கடத்தி வரப்படுவது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை ரேஷன் அரிசியுடன் பறிமுதல் செய்த போலீசார், அதில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.
அவர்களில் ஒருவர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த தேவேந்திரன் (வயது52) என்பதும், மற்றொருவர் விருத்தாசலம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (60) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட அரிசியில் 3 டன் முழு அரிசியாகவும், 5 டன் உடைத்தும் இருந்தன. எனவே அவை கோழிப்பண்ணைகளுக்கு கடத்தி வரப்பட்டதா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.