பாம்பு கடித்து இறந்த 8 வயது சிறுமி; 3 மாதத்துக்கு முன்பு சீரழித்த 75 வயது காமக்கொடூரன்
பாம்பு கடித்து மாணவி இறந்த நிலையில் பாலியல் வன்கொடுமை வீடியோ பரவியதால் முதியவர் பாலு போலீசில் சிக்கிக் கொண்டார்.
திருவள்ளூர்:
சோழவரம் அருகே உள்ள புதிய எருமை வெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி 4-ம் வகுப்பு படித்து வந்தார். தாய்-தந்தையை இழந்த அவர் செங்கல் சூளையில் வேலைபார்த்து வரும் அத்தையுடன் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.
கடந்த 24-ந் தேதி இயற்கை உபாதை கழிக்க மாணவி சென்ற போது பாம்பு கடித்தது. இதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் பாம்பு கடித்து இறந்த மாணவியை ஏற்கனவே முதியவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோவை அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் பகிர்ந்து வந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்திலும் பரவ தொடங்கியது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் உறவினர் ஒருவர் அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். வீடியோ காட்சியை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 78 வயது முதியவரான பாலு என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதனை அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் மறைந்திருந்து வீடியோ எடுத்து தனது நண்பர்களுக்கு பகிர்ந்து உள்ளார். இந்த பாலியல் கொடுமை சம்பவம் கடந்த 3 மாதத்துக்கு முன்பு நடந்துள்ளது. இதனை வெளியே சொல்லக் கூடாது என்று முதியவர் பாலு மிரட்டியதால் மாணவி வெளியே கூறாமல் இருந்து இருக்கிறார்.
இதற்கிடையே பாம்பு கடித்து மாணவி இறந்த நிலையில் பாலியல் வன்கொடுமை வீடியோ பரவியதால் முதியவர் பாலு போலீசில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் பாலு, சிறுமியின் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த சதீஷ், விஜயகுமார், ரமேஷ், பாஸ்கர், கண்ணன் ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கைதான 6 பேரையும் போலீசார் திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீஸ்காரர் ஒருவர் கூறும்போது, சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வீடியோவில் முதியவரை தள்ளிவிட முயன்றாலும் கூட அவர் மிரட்டி தனது ஆசைக்கு இணங்க வைக்கிறார்.
சிறுமியின் மரணத்திற்கு பாம்பு கடித்ததே காரணம். இந்த வீடியோவை பல வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்த 5 பேரையும் கைதுசெய்து உள்ளோம். இந்த வீடியோ காட்சியை வைத்து முதியவரை அவர்கள் மிரட்டி பணம் பறித்தனரா? என்றும் விசாரணை நடந்து வருகிறது என்றார்.