80பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தில் ரூ.60 லட்சம் மானியம்; கலெக்டர் செந்தில்ராஜ்
தூத்துக்குடி மாவட்டத்தில் 80பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தில் ரூ.60 லட்சம் மானியம் வழங்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தில் 80 பயனாளிகளுக்கு ரூ.60 லட்சம் மானியம் வழங்கப்பட்டு உள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நாட்டுக்கோழி வளர்ப்பு
தமிழக அரசு வேளாண்மை துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தில் 1000 நாட்டுக்கோழிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கோழிக்குஞ்சுகள், தீவனம், குஞ்சு பொறிக்கும் கருவி உள்ளிட்டவைக்கு மானியம் வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 80 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் ரூ.60 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு உள்ளது.
தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கோழி குஞ்சுகள் வளர்ப்பதற்கான 3 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது. கோழிக்குஞ்சுகள் வளர்ப்பது, தீவன மேலாண்மை, நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் தடுப்பூசிகள் பற்றி முழுமையாக பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் நெல்லை மாவட்டம் கால்நடை பண்ணை குஞ்சு பொரிப்பான் மற்றும் தீவன ஆலையுடன் கூடிய நாட்டுக்கோழி பண்ணையில் குஞ்சு பொரிப்பான் பற்றிய பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது.
தகுதிகள்
மேலும் இந்த திட்டத்தில் பயன் பெற விருப்பம் உள்ள தொழில் முனைவோர் 1000 நாட்டுக் கோழிகள் வளர்த்திட 2 ஆயிரத்து 500 சதுரஅடி கோழிகள் தங்கும் கூரை வசதி உடையவராக இருத்தல் வேண்டும். இந்த திட்டத்தில் 30 சதவீதம் எஸ்.சி, எஸ்.டி பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் பயனாளி 2012 முதல் 2017 - வரையிலான கோழி வளர்ப்பு திட்டத்தின் பயன் பெற்றவராக இருத்தல் கூடாது. விவசாயிகள் மற்றும் ஏழை, எளிய மக்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ளலாம். தகுதி வாய்ந்த, விருப்பம் உள்ள பயனாளிகள் அவர்களது கிராமத்தில் அமைந்துள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.