மாவட்டம் முழுவதும் ரூ.80 கோடியில்மருத்துவ கட்டிடப்பணிகள்
மாவட்டம் முழுவதும் ரூ.80 கோடி மதிப்பீட்டில் மருத்துவ கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன என அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியம் ஆகியோர் கூறினர்.
மாவட்டம் முழுவதும் ரூ.80 கோடி மதிப்பீட்டில் மருத்துவ கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன என அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியம் ஆகியோர் கூறினர்.
புதிய கட்டிடங்கள்
விருதுநகர் அருகே செங்குன்றாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், மா. சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு மாவட்டத்தில் ரூ. 3 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டிலான 12 புதிய மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினர். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கான மருந்து பெட்டகம், ஊட்டச்சத்து பெட்டகம், பள்ளி சிறுவர் கண்ணொளி காக்கும் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மூக்கு கண்ணாடிகள், காச நோயாளிகளுக்கான மருந்து பெட்டகம், தாய் சேய் நலப் பெட்டகம், பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றை அமைச்சர்கள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தில் 12 புதிய மருத்துவ கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் ரூ.80 கோடி மதிப்பீட்டில் மருத்துவ கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆரம்ப சுகாதார நிலையம்
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் மாவட்டம் 100 சதவீத மருத்துவ பரிசோதனை செய்து சாதனை படைத்துள்ளது. 2 லட்சத்து 61 ஆயிரம் பேருக்கு முதல்கட்ட மருத்துவ பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. 8 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு 2-வது கட்ட மருத்துவ பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. இலுப்பையூர் மற்றும் செம்பட்டியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அமைச்சர்கள் கூறினா்.
இதில் தென்காசி எம்.பி. தனுஷ் குமார், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கபாண்டியன், ரகுராமன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், சாத்தூர் யூனியன் தலைவர் நிர்மலா கடற்கரை ராஜ், விருதுநகர் நகரசபை தலைவர் மாதவன், மருத்துவக்கல்லூரி முதல்வர் சங்கு மணி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.