நட்சத்திர ஏரியில் விடுவதற்கு 80 புதிய படகுகள்


நட்சத்திர ஏரியில் விடுவதற்கு 80 புதிய படகுகள்
x
தினத்தந்தி 20 July 2023 1:15 AM IST (Updated: 20 July 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் சார்பில் நட்சத்திர ஏரியில் விடுவதற்கு 80 புதிய படகுகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல்

கொடைக்கானல் நகரின் இதய பகுதியில் நட்சத்திர ஏரி உள்ளது. கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் சிறந்த பொழுது போக்கு அம்சமாக இந்த ஏரி திகழ்கிறது. ஏரியை சுற்றிலும் சைக்கிள், குதிரை சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்கின்றனர். மேலும் நட்சத்திர ஏரியில் படகுசவாரி செய்வது சுற்றுலா பயணிகளுக்கு வாடிக்கையாகும். பல்வேறு சிறப்புக்கு சொந்தமான நட்சத்திர ஏரியில் ரூ.24 கோடியில் அபிவிருத்தி பணி நடந்து வருகிறது. அதன்படி ஏரியைச் சுற்றி நவீன நடைபாதை அமைக்கப்படுகிறது. கூடுதலாக மின் விளக்குகள் பொருத்தப்பட உள்ளன. படகுகளில் ஏறுவதற்கு நடைமேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

நட்சத்திர ஏரியில் நகராட்சி படகு குழாம் செயல்படுகிறது. தற்போது அந்த படகு குழாமுக்கு புதிதாக 80 படகுகள் வாங்குவதற்கு கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதில் சுற்றுலா பயணிகள் ஓட்டுவதற்கான துடுப்பு படகுகள், பெடல் படகுகள், அலங்கார படகுகள் ஆகியவை அடங்கும். தற்போது வரை 35 புதிய படகுகள் கொடைக்கானலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மீதமுள்ள படகுகள் விரைவில் வாங்கப்பட்டு, சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட உள்ளது.

இந்தநிலையில் புதிதாக வாங்கப்பட்ட படகுகளை கொடைக்கானல் நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், ஆணையாளர் சத்தியநாதன், பொறியாளர் முத்துக்குமார் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். புதிதாக வாங்கப்பட்ட படகுகள், அனைவரையும் கவரும் வகையில் நவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story