தேர்தல் வாக்குறுதிகள் 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது முதல்-அமைச்சர் பேச்சு
தேர்தல் வாக்குறுதிகள் 80 சதவீதத்துக்கும் மேல் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. மூத்த நிர்வாகிகள் 500 பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது.
தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கி பேசியதாவது:-
முத்தமிழறிஞர் கலைஞரின் 99-ம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இதனை ஜூன் 3-ந்தேதியோடு நிறுத்திக்கொள்ளவில்லை. அடுத்த ஆண்டு ஜூன் 3-ந்தேதி வரை கொண்டாடுவோம். ஏற்கனவே மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி, கருணாநிதி பிறந்தநாளை எப்படியெல்லாம் கொண்டாடவேண்டும் என்பதை முறைப்படுத்தி, தீர்மானம் போட்டு அதில் முக்கியமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் கட்சியின் முன்னோடிகளை பெருமைப்படுத்தும் வகையில் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு, அந்த நிகழ்ச்சி தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறத் தொடங்கியிருக்கிறது.
உழைப்பு
நம்முடைய இயக்கத்துக்கு உழைத்துக் கொண்டிருக்கும், பாடுபட்டுக்கொண்டிருக்கும் கட்சியின் முன்னோடிகளுக்காக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பொற்கிழி வழங்குகிற காரணத்தால் ஏதோ நீங்கள் செய்த பணிகளுக்கு பரிகாரம் என்று நினைத்துவிடக்கூடாது. நீங்கள் செய்து கொண்டிருக்கும் பணிகளுக்கு எதுவும் ஈடாகாது. என்ன கொடுத்தாலும் ஈடாகாது. அப்படிப்பட்ட பணிகளை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
6-வது முறையாக நாம் ஆட்சியில் இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் நீங்கள்தான், உங்களுடைய உழைப்புதான். நாங்கள் பொறுப்புகளில் இருக்கிறோம் என்றால், அதற்கு முழு காரணம் நீங்கள்தான். அதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. அப்படிப்பட்ட உங்களுக்கு, உங்களை ஊக்கப்படுத்துவதற்காகத்தானே தவிர, உங்களுக்கு நன்றி சொல்வதற்காக அல்ல, உங்கள் உழைப்புக்கு ஏதோ கூலியாக நினைத்து பரிகாரம் காணும் வகையில் அல்ல. உங்கள் உழைப்புக்கு ஈடு, இணை எதுவும் இருக்கமுடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்.
தேர்தல் வாக்குறுதிகள்
தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்துக்கு உழைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு மரியாதை, பெருமையை தேடித்தரவேண்டும். அதன் மூலமாக நாங்கள் பெருமை அடையவேண்டும். இன்றைக்கு தமிழ் சமூகத்துக்காக, 'பதவி என்னும் படகு ஏறித்தான் பணியாற்ற வேண்டும் என்பதல்ல', படகில் சென்றுதான் பணியாற்றவேண்டும் என்று அவசியமில்லை. நீந்திக்கொண்டும் பணியாற்ற முடியும். எனவே நாங்கள் எல்லாம் படகில் ஏறி பணியாற்றுகின்றோம். நீங்கள் நீந்திக்கொண்டே பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.
தேர்தல் நேரத்தில் என்னென்ன வாக்குறுதிகளை, உறுதிமொழிகளை மக்களிடத்தில் எடுத்துச் சொன்னோமோ, அவைகள் ஓரளவுக்கு, ஏன் 80 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இன்னும் 20 சதவீதம் இருக்கிறது.
உறுதியாக காப்பாற்றுவேன்
நாம் ஆட்சிக்கு வந்தபோது, ஒரு பக்கம் கொரோனா என்ற கொடிய நோய். இன்னொரு பக்கம் நிதிப்பற்றாக்குறை. கஜானா காலியாக இருந்த ஒரு கொடுமை. எனவே இதையெல்லாம் சமாளித்து 80 சதவீதத்துக்கு மேல் தேர்தல் நேரத்தில் தந்த உறுதிமொழிகளை காப்பாற்றி இருக்கிறோம். மீதமிருக்கும் 20 சதவீதத்தையும் நான் உறுதியோடு சொல்கிறேன், அதையும் உறுதியாக காப்பாற்றுவோம் என்பதை உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏதோ உங்களுக்கு பொற்கிழி கொடுத்துவிட்டோம், நீங்கள் சென்று ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் என்பதற்காக கொடுக்கவில்லை. இன்னும் பல பணிகளை நீங்கள் செய்யவேண்டும். அதன் மூலமாக நாங்களும் அந்த பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும். உங்களை ஊக்கப்படுத்துவதற்காகத்தான், உற்சாகப்படுத்துவதற்காகத்தான் பொற்கிழி என்ற பெயரில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆட்சிக்கு நீங்கள் என்றைக்கும் பக்கபலமாக இருக்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், எம்.பி.க்கள் எஸ்.ஜெகத்ரட்சகன், ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் சா.மு.நாசர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.