ஆன்லைனில் 80 சதவீத பணிகள்: வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுனர் உரிமம் பெறும் வழிமுறைகள்


ஆன்லைனில் 80 சதவீத பணிகள்: வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுனர் உரிமம் பெறும் வழிமுறைகள்
x

சேலம் மாவட்டத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆன்லைன் மூலமாக 80 சதவீத பணிகள் நடக்கின்றன. ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேலம்

ஓட்டுனர் உரிமம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக மொபட், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர்கள் இல்லாத வீடுகளே இல்லை என்று கூறலாம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் வாகனம் ஓட்டுவதற்கு ஓட்டுனர் உரிமம் பெறுவது கட்டாயம் ஆகும். அதாவது, 18 வயது முடிந்திருந்தால் 50 சிசி-க்கும் மேற்பட்ட கியர் வாகனங்கள் (மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர்கள்) ஓட்டலாம்.

அதேபோல், இலகு ரக வாகனங்கள் (கார், ஜீப்) ஓட்டுவதற்கு லைசென்ஸ் பெறலாம். ஆனால் இப்போது பலபேர் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்வதை காணமுடிகிறது. இது எவ்வளவு பெரிய தவறு என்பதை ஆபத்து வரும்வரை உணரமாட்டார்கள். ஏகப்பட்ட படிவங்களை நிரப்ப வேண்டும். கால்கடுக்க ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வரிசையில் நிற்க வேண்டும் என்று தாங்களாகவே ஏதேதோ கற்பனை செய்து கொண்டு ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்காமல் இருக்கிறார்கள்.

இணையதளம் மூலம்...

18 வயது முடிந்திருந்தால் ஓட்டுனர் உரிமம் பெற ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ் அல்லது பள்ளி சான்றிதழ், எந்த வகையான ரத்தம் என்பதற்கான சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-4 போன்றவை தேவைப்படும். இதற்கு முன்பு பழகுனர் உரிமம், ஓட்டுனர் உரிமம் ஆகியவை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும்.

ஆனால் கொரோனா பரவலுக்கு பின்பு வாகன ஓட்டுனர் உரிமம் பெற நேரடியாக சென்று காத்திருக்க வேண்டியதில்லை. ஆன்லைன் மூலமாகவே இருசக்கர மற்றும் நான்கு சக்கர ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்ற நடைமுறை இருந்து வருகிறது. இதற்காக தமிழக அரசின் www.parivahan.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

நேரில் ஆஜர்

ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் அதன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். ஸ்மார்ட் போனை பயன்படுத்த முடியாதவர்கள், படிக்க தெரியாதவர்கள் இருந்தால் அவர்கள் கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கு தேவையான கட்டணமும் ஆன்லைன் மூலமாகத்தான் செலுத்த வேண்டும். அதன்பிறகு பழகுனர் உரிமம் (எல்.எல்.ஆர்.) பெற்றுக்கொள்ளலாம்.

இந்த பழகுனர் உரிமத்தை 6 மாதங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அதன்பிறகு ஓட்டுனர் உரிமம் பெற நேரில் ஆஜராக வேண்டும். பழகுனர் உரிமம் பெற்று 30 நாட்களுக்கு பிறகு ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். போக்குவரத்துத்துறையை பொறுத்தவரையில் அனைத்து வகையான பணிகளுக்கும் ஆன்லைன் மூலமாகவே பணபரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

80 சதவீதம் பணிகள்

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் சேலம் மேற்கு, சேலம் கிழக்கு, சேலம் தெற்கு, சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர் ஆகிய 6 இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களும், ஓமலூர் மற்றும் வாழப்பாடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.

இந்த அலுவலகங்கள் அனைத்தும் தமிழக அரசின் போக்குவரத்துத்துறை கீழ் இயங்குகின்றது. இங்கு வாகனங்களை ஓட்டுவதற்கு தேவையான ஓட்டுனர் உரிமம், பழகுனர் உரிமம், நடத்துனர் உரிமம் வழங்குதலும், வாகனங்கள் பதிவு மற்றும் புதுப்பித்தல் சான்று, வாகனங்கள் தகுதிச்சான்று மற்றும் புதுப்பித்தல் போன்ற பணிகளுக்காக அலுவலக வேலை நாட்களில் அதிகளவில் நபர்கள் வந்து செல்கிறார்கள். ஆனால் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் 80 சதவீதம் பணிகள் ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடும் சிரமம்

சேலம் கந்தம்பட்டியில் உள்ள மேற்கு வட்டார போக்குவரத்துக்கு ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகனப்பதிவு, புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால் அங்கு அமருவதற்கு இருக்கை வசதி எதுவும் இல்லை. இதனால் அதிகாரிகள் வரும் வரைக்கும் பல மணி நேரம் நின்று கொண்டே இருப்பதால் அங்கு வருபவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, அங்கு இருக்கை மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story