தீபாவளி பண்டிகைக்கான ஆர்டர் 80 சதவீதம் குறைந்தது


தீபாவளி பண்டிகைக்கான ஆர்டர் 80 சதவீதம் குறைந்தது
x

தீபாவளி பண்டிகைக்கான ஆர்டர் 80 சதவீதம் குறைந்தது

திருப்பூர்

திருப்பூர்

டாலர் சிட்டி என்ற அந்தஸ்து பெற்ற திருப்பூர் பின்னலாடை வர்த்தகம் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு அன்னிய செலாவணியை அதிகம் ஈட்டிக்கொடுத்து வந்தது. 8 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வந்த பனியன் தொழில் கடந்த 2 ஆண்டுகளாக மிகவும் தொய்வான நிலையை சந்தித்து வருகிறது. கொரோனா காலத்துக்கு பிறகு தொழில் தட்டுத்தடுமாறி எழுந்த நிலையில் நூல் விலை உயர்வு காரணமாக தொழில் பெரும் முடக்கத்தை சந்தித்தது.

பெரும்பாலான நிறுவனங்கள் புதிய ஆர்டர்களை எடுக்காமல் விட்டனர். ஏற்கனவே தயாரித்து கொடுத்த ஆர்டர்கள் வெளியே செல்லாமல் தேங்கியது. ஒரு கட்டத்தில் புதிய ஆர்டர்கள் இல்லாமல் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே பெரும்பாலான பனியன் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இதை நம்பியுள்ள ஜாப்ஒர்க் தொழில்களும் வேலைவாய்ப்பை இழந்து விட்டன.

வேலைவாய்ப்பு குறைந்தது

வழக்கமாக தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூருக்கு பனியன் தயாரிப்பு ஆர்டர்கள் குவியும். குறிப்பாக உள்நாட்டு ஆடை தயாரிப்பாளர்கள் ஒருமாதம் முன்பிருந்தே மிகவும் பரபரப்பாக பனியன் உற்பத்தியில் ஈடுபடுவார்கள்.

தொழிலாளர்களுக்கும் இரவு, பகலாக வேலைவாய்ப்பு இருந்து வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான ஆர்டர் என்பது மிகவும் குறைவாகவே வந்துள்ளன. 20 சதவீத நிறுவனங்களே இயங்குவதாக தெரிவித்தனர். ஆடைகள் தேக்கமடைந்ததால் உற்பத்தியை குறைத்து, இருக்கின்ற ஆர்டர்களை விற்பனை செய்யவே முனைப்பு காட்டுவதாகவும் தெரிவித்தார்கள். இதன்காரணமாக தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்து விட்டது.

70 சதவீத தொழில் நிறுவனங்கள்

தீபாவளி பண்டிகைக்கு தொழிலாளர்களுக்கு போனஸ் கிடைப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஆனால் சரியான தொழில் இல்லாததால் இந்த ஆண்டு போனஸ் தொழிலாளர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றே தெரிவித்தனர்.

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் (டீமா) முத்துரத்தினம் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 வாரங்களே உள்ளன. வழக்கமாக இந்த நேரத்தில் பனியன் நிறுவனங்களில் வேலை இரவு, பகலாக நடக்கும். ஆனால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 20 சதவீத ஆர்டர்களே வந்துள்ளன. நூல் விலை உயர்வு உள்ளிட்டவை காரணமாக புதிய ஆர்டர்கள் எடுக்கவில்லை. அதுபோல் வடமாநிலங்களில் மழை காரணமாக ஏற்கனவே தயாரித்து அனுப்பிய ஆடைகள் விற்காமல் தேங்கி விட்டன. திருப்பூரில் 70 சதவீத தொழில் நிறுவனங்கள் முடங்கி கிடக்கின்றன.

இதுபோல் ரஷியா-உக்ரைன் போர் காரணமாக மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. இதனால் ஆடைகள் விற்பனை பெரிதும் குறைந்து விட்டன. திருப்பூர் பனியன் வர்த்தகம் பருத்தி இழை ஆடைகளை தயார் செய்து விற்பனை செய்கிறோம். ஆனால் பஞ்சு, நூல் விலை உயர்வால் பருத்தி ஆடை தயாரிப்பு குறைந்து விட்டன. பாலியெஸ்டர் போன்ற செயற்கை இழை ஆடைகள் விற்பனை அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால் திருப்பூரில் பருத்தி ஆடை தயாரிப்பு பெரும் வீழ்ச்சியை சந்திக்கும். பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு இல்லாததால் ஜாப்ஒர்க் நிறுவனங்கள் 30 சதவீதம் மட்டுமே இயங்குகிறது. தொழிலாளர்களுக்கு வாரத்துக்கு 3 நாட்கள் கூட வேலை கொடுக்க முடியவில்லை.

80 சதவீத ஆர்டர் குறைந்தது

தீபாவளி பண்டிகைக்கான ஆர்டர்கள், கடந்த ஆண்டைவிட தற்போது 80 சதவீதம் குறைந்துள்ளது. பனியன் நிறுவனங்களில் ஆடைகள் தேங்கி கிடக்கிறது. வெளிமாநில வர்த்தகர்கள் இன்னும் 2 மாதங்கள் பொறுத்திருக்குமாறு தெரிவிக்கிறார்கள். இதனால் ஆடைகள் உற்பத்தி முடங்கியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கான ஆர்டர் இந்த ஆண்டு திருப்பூரை விட்டு சென்று விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story