வேலூர் மாவட்ட மாணவ-மாணவிகள் 80 சதவீதம் பேர் தேர்ச்சி
வேலூர் மாவட்ட மாணவ-மாணவிகள் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 80.02 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றதில் கடைசி இடத்தைத்தான் பிடிக்க முடிந்துள்ளது.
வேலூர் மாவட்ட மாணவ-மாணவிகள் பிளஸ்-1 பொதுத்தேர்வில் 80.02 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றதில் கடைசி இடத்தைத்தான் பிடிக்க முடிந்துள்ளது.
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடந்தது. அதன் முடிவுகள் வெளியானது. வேலூர் மாவட்டத்தில் 7,858 மாணவர்கள், 8,358 மாணவிகள் என்று மொத்தம் 16,216 மாணவ-மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினார்கள். அதில், 5,550 மாணவர்கள், 7,426 மாணவிகள் என்று 12,976 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 3,240 மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. மாணவர்கள் 70.63 சதவீதமும், மாணவிகள் 88.85 சதவீதம் என்று மொத்த தேர்ச்சி விகிதம் 80.02 சதவீதமாகும்.
வேலூர் மாவட்டத்தில் பார்வையற்றோர் 8 பேர் உள்பட 80 மாற்றுத்திறனாளிகள் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதினார்கள். அதில், 59 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 66.67 சதவீதமாகும். வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதிய 65 அரசுப்பள்ளிகளை சேர்ந்த 8,821 மாணவ-மாணவிகளில் 6,337 பேர் தேர்ச்சி பெற்றனர்.
கடைசி இடம்
தமிழக அளவில் பிளஸ்-1 பொதுத்தேர்வில் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்தது. பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதையொட்டி மாணவ-மாணவிகள் பலர் தாங்கள் படித்த பள்ளிக்கு உற்சாகத்துடன் சென்றனர். அங்கு அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்த தேர்வு முடிவுகளை ஆர்வத்துடன் பார்வையிட்டனர். மேலும் உடன் படித்த மாணவ-மாணவிகளின் மதிப்பெண்ணை பார்த்து செல்போனில் தெரிவித்தனர். மாணவர்கள் பலர் தங்களது தேர்ச்சி சதவீதத்தை இணையதளம் மற்றும் செல்போன் மூலம் தெரிந்து கொண்டனர்.
வேலூரில் இருந்து பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் பிளஸ்-1 பொதுத்தேர்வில் வேலூரை விட கூடுதலாக 6 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. வேலூர் மாவட்டம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்விலும் கடைசி இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. 3 பொதுத் தேர்விலும் வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்தது மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
9 கைதிகள் தேர்ச்சி
வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஜெயில்கள் உள்ளன. இங்கு தண்டனை அனுபவித்து வரும் 7 ஆண் கைதிகள், 2 பெண் கைதிகள் என்று 9 கைதிகள் ஆண்கள் ஜெயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதினர். அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.