ஆட்டோவில் கடத்திய 800 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்
விழுப்புரம் அருகே ஆட்டோவில் கடத்திய 800 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதி, சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன் மற்றும் போலீசார், நேற்று மதியம் விக்கிரவாண்டி அருகே கோழிப்பண்ணை கிராமத்தில் கொளப்பாக்கம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அந்த ஆட்டோவினுள் 40 கிலோ எடை கொண்ட 20 சாக்கு மூட்டைகளில் 800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், விக்கிரவாண்டி அருகே கல்யாணம்பூண்டி கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் (வயது 52) என்பதும், இவர் கோழிப்பண்ணை பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை முட்டத்தூரில் உள்ள நடராஜன் என்பவருக்கு சொந்தமான அரவை மில்லுக்கு கடத்திச்செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ராமலிங்கம், நடராஜன் ஆகிய இருவரின் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமலிங்கத்தை கைது செய்து அவரிடமிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.