800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
பரமக்குடி அருகே ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து ராமநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் தலைமையில் முத்துகிருஷ்ணன், குமாரசாமி உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் திருவரங்கம் செல்லும் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வெங்கிட்டங்குறிச்சி பஸ் நிறுத்தம் பகுதியில் போலீசாரை கண்டதும் வேனை நிறுத்தி விட்டு ஒருவர் தப்பி ஓடினார். போலீசார் அங்கு சென்று அந்த வேனை சோதனையிட்டபோது, 20 மூடைகளில் தலா 40 கிலோ எடை கொண்ட 800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிந்தது. இந்த ரேஷன் அரிசியை வேனுடன் பறிமுதல் செய்த போலீசார் ராமநாதபுரம் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து ரேஷன் அரிசியை கடத்தி வந்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல பரமக்குடி வைகை நகர் பகுதியில் வேனில் கடத்தி வரப்பட்ட தலா 30 கிலோ எடையுள்ள 42 மூடைகளில் ஆயிரத்து 260 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மதுரை பழங்காநத்தம் முத்துப்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (25) மற்றும் மதுரை புளியங்குளம் பகுதியை சேர்ந்த குமார் (43) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி ராமநாதபுரம் நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.