குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 800 போலீசார்
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 800 போலீசார் ஈடுபட்டு உள்ளனர். ரெயில் நிலையங்களிலும் தீவிர சோதனை நடந்தது.
நாகர்கோவில்:
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 800 போலீசார் ஈடுபட்டு உள்ளனர். ரெயில் நிலையங்களிலும் தீவிர சோதனை நடந்தது.
பலத்த பாதுகாப்பு
கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந்தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது.
அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) பாபர் மசூதி இடிப்பு தினம் வருவதையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
800 போலீசார்
அதன்படி குமரி மாவட்டத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் 800 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் பெட்டி மற்றும் பைகள் வெடிகுண்டை கண்டறியும் கருவி (மெட்டல் டிடெக்டர்) மூலமாக போலீசார் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கிறார்கள். மேலும் ரெயில் தண்டவாளங்கள், ரெயில்வே பாலங்களிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது ரெயில் நிலையத்துக்கு வந்த பார்சல்களையும் போலீசார் வெடிகுண்டை கண்டறியும் கருவி மூலம் சோதனை செய்தனர். அத்துடன் கன்னியாகுமரி, இரணியல், குழித்துறை உள்ளிட்ட அனைத்து ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
கண்காணிப்பு
அதோடு வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையத்தில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. சோதனை சாவடிகள் வழியாக மர்ம நபர்கள் ஊடுருவ வாய்ப்புகள் உள்ளதால் சோதனை சாவடியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கன்னியாகுமரியில் உள்ள தங்கும் விடுதிகளில் மர்ம நபர்கள் யாரும் தங்கி உள்ளனரா? என்றும் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
மேலும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடல் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கடலோர கிராமங்களிலும் கண்காணிப்பு பணி நடக்கிறது. அதோடு மர்ம படகுகள் ஏதேனும் கடல் வழியாக வந்தால் உடனே தகவல் தெரிவிக்கும்படி மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
--------