875 பயனாளிகளுக்கு ரூ.8.10 கோடியில் நலத்திட்ட உதவிகள்-அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்
தென்காசியில் 875 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
தென்காசியில் 875 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
தமிழக அரசு பதவியேற்று 2 ஆண்டு நிறைவை முன்னிட்டு தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி, 875 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், ராஜா, சதன் திருமலைகுமார், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:-
பல்வேறு சாதனைகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற 2 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகள் செய்துள்ளார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திட்டங்களை மக்களுக்காக கொண்டு வருகிறார். ஏழைகளின் வறுமைகளை போக்கும் விதமாக பயனாளிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் ஆதரவற்ற விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகை போன்றவை வழங்கப்படுகிறது.
மேலும் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, வரன்முறை பட்டா, நத்தம் பட்டா போன்றவையும், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மூலம் பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையும் வழங்கப்படுகிறது. சமூக நலன் மற்றும் மகளிர் துறை மூலம் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு தையல் எந்திரம் வழங்கப்படுகிறது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் விசைத்தெளிப்பான்கள், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, தென்காசி நகராட்சி தலைவர் சாதிர், துணைத்தலைவர் கே.என்.எல்.சுப்பையா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.