திருச்செந்தூரில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 82 பீடி பண்டல்கள் பறிமுதல்
திருச்செந்தூரில் இருந்துஇலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.6 லட்சம் மதிப்புள்ள 82 பீடி பண்டல்களை கடலோர போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.6 லட்சம் மதிப்புள்ள 82 பீடி பண்டல்களை கடலோர போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் கண்காணிப்பு
தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து கஞ்சா, போதைப்பொருகள் பீடி இலைகள் தொடர்ந்து இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகின்றன. இதை தடுக்க மாவட்டத்திலுள்ள கடற்கரை பகுதியில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் போலீசார் இரவு, பகலாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலைில் திருச்செந்தூர் கடல் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஓடக்கரை கடற்கரை பகுதியில் கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோமதிநாயகம் தலைமையில் ஏட்டு மாடசாமி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கடற்கரை அருகே சுமார் 50 மீட்டர் தூரத்தில் ஒரு லோடு ஆட்டோவில் இருந்து பண்டல்கள் இறக்கப்பட்டு கொண்டிருந்தன. இதை கவனித்த போலீசார் அந்த பகுதியை சுற்றிவளைத்தனர்.
பீடி பண்டல்கள்
அப்போது கடற்கரையில் ஏற்கனவே 43 பண்டல்கள் இறக்கி வைக்கப்பட்டு இருந்த நிலையில் மேலும் 39 பண்டல்கள் ஆட்டோவில் இருந்து ஒருவர் இறக்கி கொண்டிருந்தார். அந்த லோடு ஆட்டோவை சுற்றி வளைத்து போலீசார் டிரைவரை பிடித்து விசாரித்தனர். அவர், காயல்பட்டினம், பைபாஸ் ரோடு, உச்சி மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் சுடலைமுத்து (வயது 26) என்பது தெரிய வந்தது.
ஆட்டோவில் இருந்து இறக்கி வைக்கப்பட்டு இருந்த பண்டல்களில் தலா 30 கிலோ எடை கொண்ட 82 பீடி பண்டல்கள் என்றும், அவரை இலங்கைக்கு படகு மூலம் கடத்த திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து 2 ஆயிரத்து 460 கிலோ எடை கொண்ட 82 பீடி பண்டல்களை லோடு ஆட்டோவுடன் கடலோர போலீசார் பறிமுதல் செய்தனர். பீடி பண்டல்களின் மொத்த மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். இந்த பீடி பண்டல்கள் மற்றும் டிரைவரை சுங்கத்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
திருச்செந்தூரிலிருந்து இலங்கைக்கு பீடி பண்டல்கள் கடந்த முயன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.