மேலூரில் ரூ.84 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு
மேலூரில் ரூ.84 கோடியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திறக்கப்பட்டு உள்ளது. அதில் 850 பயனாளிகளுக்கான குடியிருப்புக்கான ஆணையை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
மேலூரில் ரூ.84 கோடியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திறக்கப்பட்டு உள்ளது. அதில் 850 பயனாளிகளுக்கான குடியிருப்புக்கான ஆணையை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
850 பயனாளிகள்
மேலூர் அருகே தெற்குதெரு மற்றும் கருத்தபுளியம்பட்டி ஆகிய கிராமங்களில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறையின் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ.84.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து மேலூரில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து 850 பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான ஆணைகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து பள்ளி கல்வித்துறை சார்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மதுரை மாவட்ட அளவிலான கலைத்திருவிழா மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதன் பின்னர் மேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூ.3 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் புதிய யூனியன் அலுவலக கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜையை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
கலந்து ெகாண்டவர்கள்
இந்த நிகழ்ச்சிகளில் மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர், எம்.எல்.ஏ.க்கள் பெரியபுள்ளான், வெங்கடேசன், பூமிநாதன், கூடுதல் கலெக்டர் சரவணன், மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன், அ.வள்ளாலபட்டி பேரூராட்சி சேர்மன் குமரன், மேலூர் நகராட்சி சேர்மன் முகமது யாசின், மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மேலூர் மாவட்ட கல்வி அலுவலர் முத்துலட்சுமி, மேலூர் தாசில்தார் சரவணபெருமாள், மேலூர் யூனியன் கமிஷனர் பாலசந்தர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.