ரூ.86 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
ரூ.86 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
செம்பட்டு:
தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களில் சில பயணிகள் தங்கம் கடத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. இதைத்தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அதிக அளவில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த திருவள்ளூரை சேர்ந்த ஷேக் அப்துல் காதர்(வயது 43) என்ற பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை தனியாக அழைத்து சென்று அவரையும், அவரது உடைமைகளையும் சோதனை செய்தனர். இதில் அவர் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
எலக்ட்ரானிக் பொருட்களில்...
இதேபோல் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு 'ஸ்கூட்' விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது தஞ்சாவூரை சேர்ந்த அபூசலி(41) என்ற பயணி தான் கொண்டு வந்த எலக்ட்ரானிக் பொருட்களில் தாமிர கம்பி வடிவில் மறைத்து தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, 2 பயணிகளிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவங்களில் 2 பயணிகளிடமும் இருந்து மொத்தம் 1 கிலோ 516 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவற்றின் மதிப்பு ரூ.86 லட்சத்து 13 ஆயிரம் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.