குரூப்-4 தேர்வை 8,763 பேர் எழுதினார்கள்
நீலகிரி மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 8,763 பேர் எழுதினார்கள்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 8,763 பேர் எழுதினார்கள்.
குரூப்-4 தேர்வு
தமிழகத்தில் காலியாக உள்ள 7,301 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் குரூப்-4 தேர்வு நேற்று நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் குரூப்-4 தேர்வுக்காக 40 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. காலை 8.30 மணிக்கு முன்னர் தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு வந்தனர். ஹால் டிக்கெட்டுகளை காண்பித்த பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
9 மணிக்கு அறைகளில் அமர வைக்கப்பட்டு, வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. தேர்வர்கள் முககவசம் அணிந்து இருந்தனர். தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 11,151 பேர் குரூப்-4 தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். 9 பறக்கும் படை அலுவலர்கள், 6 தாலுகாவில் 6 மேற்பார்வை அலுவலர்கள் தேர்வை கண்காணித்தனர். ஒவ்வொரு மையங்களுக்கும் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
2,388 பேர் வரவில்லை
பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள் 40 பேர் ஆய்வு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. நீலகிரியில் குரூப்-4 தேர்வை 8,763 பேர் எழுதினர். இது மொத்தம் 78.58 சதவீதம் ஆகும். 2,388 பேர் தேர்வு எழுத வரவில்லை. ஊட்டியில் தேர்வு நடந்த மையங்களை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிரிக்ஸ் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளியில் நடந்த தேர்வை ஆய்வு மேற்கொண்டார்.
டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் டாக்டர் பி.கிருஷ்ணகுமார் ஊட்டி அரசு கலைக்கல்லூரி, தனியார் பள்ளிகளில் நடந்த தேர்வை ஆய்வு செய்தார். முன்னதாக தேர்வர்கள் மையங்களுக்கு வர சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்த வழிமுறைகள் முழுமையாக பின்பற்றி தேர்வு நடந்தது.
அனுமதி மறுப்பு
கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்கு முன்பு தேர்வர்கள் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. நேற்று பிற மாவட்டங்களை சேர்ந்த தேர்வர்கள் 10-க்கும் மேற்பட்டோர் தாமதமாக தேர்வு மையத்துக்கு வந்தனர். இதனால் அவர்களை அதிகாரிகள் மற்றும் போலீசார் மையத்திற்குள் அனுமதிக்க மறுத்தனர். இதனால் தேர்வர்கள் தேர்வு எழுதாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.